×

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு சிவசேனா எம்.பி. ஆதரவு தந்தாரா? புதிய சர்ச்சையால் பரபரப்பு

மும்பை: குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டம் (என்.ஆர்.சி.) ஆகியவற்றை சிவசேனா தலைமை விமர்சித்து வரும் நிலையில் அக்கட்சியை சேர்ந்த எம்.பி. ஒருவர் இவற்றுக்கு ஆதரவு தெரிவித்து கடிதம் எழுதியதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. மகாராஷ்டிராவின் ஹிங்கோலி தொகுதி எம்.பி.யாக இருப்பவர் ஹேமந்த் பாட்டீல். சிவசேனாவை சேர்ந்த இவர் மாவட்ட கலெக்டருக்கு எழுதிய கடிதத்தில், “நான் சில கூட்டங்களில் பங்கேற்க வேண்டியிருந்ததால் குடியுரிமை சட்டம் மற்றும் என்.ஆர்.சி.க்கு ஆதரவாக என் தொகுதியில் நடந்த பேரணியில் பங்கேற்க இயலவில்லை.

அந்த சட்டங்களை நான் ஆதரிக்கிறேன்” என்று கூறியிருந்ததாக செய்தி வெளியானது. ஆனால் ஹேமந்த் பாட்டீல் இந்த செய்தியை மறுத்துள்ளார். அதுபோன்ற ஒரு கடிதத்தை தான் எழுதவில்லை என்று கூறியிருக்கிறார். அவர் இதுகுறித்து நிருபர்களிடம் கூறுகையில், “அதுபோன்ற கடிதம் எதையும் மாவட்ட கலெக்டருக்கு நான் எழுதவில்லை. ரயில்வே முன்பதிவுக்காக நான் எழுதிய கடிதம் ஒன்று தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் உள்ள தகவலை கம்ப்யூட்டர் மூலம் மாற்றி வெளியிட்டுள்ளனர். அந்த கடிதம் வாட்ஸ்அப் மற்றும் பிற சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. இந்த பிரச்னை குறித்து ஹிங்கோலி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளேன். அதில் குற்றவாளிகளை கண்டுபிடிக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளேன்” என்றார்

Tags : Shiv Sena ,The New Controversy , Citizenship Amendment Act, Shiv Sena MP Support, new controversy, stir
× RELATED இந்தியாவை ஆட்டிப் படைத்து கொரோனா...