×

சூரிய கிரகணத்தின்போது மனநலம் பாதித்த குழந்தைகளை கழுத்தளவு மண்ணில் புதைக்கும் விநோதம்: சிறுமி மயக்கமடைந்ததால் பதற்றம்

கலபுர்கி: கர்நாடக மாநிலம் கலபுர்கியில் சூரியகிரகணத்தையொட்டி மனநலம் பாதித்த குழந்தைகளை கழுத்தளவு மண்ணில் புதைத்தால் குணமடையும் என்ற நம்பிக்கை நிலவி வருகிறது. அவ்வாறு கழுத்தளவு மண்ணில் புதைத்த ஒரு சிறுமி திடீரென மயங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. கர்நாடக மாநிலம் கலபுர்கி தாஜ்கல்தான்பூர் கிராமத்தில் சூரிய கிரகணத்தின்போது மனநலம் பாதித்த சிறுவர், சிறுமிகள், குழந்தைகளை ஆட்டுசாணம் நிறைந்த மண்ணில் கழுத்தளவு புதைக்கின்றனர். இவ்வாறு செய்வதால் அவர்களுக்கு நோய் குணமாகும் என்ற மூடநம்பிக்கை நிலவி வருகிறது. இதுபோல் ஒவ்வொரு கிரகணத்தின் போதும் இந்த கிராம மக்கள் இவ்வாறு செய்கின்றனர்.

இந்நிலையில் நேற்று சூரிய கிரகணத்தையொட்டி அக்கிராமத்தில் மனநலம் பாதித்த 3 சிறுமிகள் கழுத்தளவு மண்ணில் புதைக்கப்பட்டனர். ஆனால், அவர்களில் 4 வயது சிறுமி சஞ்சனா திடீரென சுயநினைவு இழந்தார். இதையறிந்த உள்ளூர் தன்னார்வலர்கள் சிறுமியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தனர். பின்னர் மற்ற இரு சிறுமிகளையும் மண்ணில் இருந்து மீட்டு வெளியே கொண்டு வந்தனர். அந்த சிறுமிகளால் சரியாக அமர கூட முடியவில்லை. மனநல நோய்க்கு மருத்துவமனையில் லட்சக்கணக்கில் செலவு செய்தும் பயனில்லாததால், சூரிய கிரகணத்தின் போது கழுத்தளவு மண்ணில் புதைத்தால் நோய் குணமாகும் என்ற நம்பிக்கையில் பெற்றோர்கள் இதுபோன்று செய்ததாக தெரியவந்துள்ளது. ஆனால் இச்சம்பவம் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : children , Solar eclipse, mental, baby, neck mud, burying odor, girlish dizziness, tension
× RELATED 2 குழந்தைகளை கிணற்றில் தள்ளி கொன்று...