×

அரியலூர் அருகே ஆச்சர்யம் வேட்பாளர்கள் வழங்கிய பரிசுகளை கோயிலில் ஒப்படைத்த வாக்காளர்

அரியலூர்: அரியலூர் அருகே வேட்பாளர்கள் கொடுத்த காமாட்சி அம்மன் விளக்கு, குத்துவிளக்குகள் உள்ளிட்ட பரிசு பொருட்களை கோயிலில் வாக்காளர் ஒப்படைத்தார். தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் முதல் கட்டமாக இன்று நடக்கிறது. முதல்கட்ட வாக்கு பதிவுக்கான பிரசாரம் நேற்று முன்தினம் மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. இந்நிலையில், வேட்பாளர்கள் தங்களுக்கு வாக்களிக்க ஒலிபெருக்கி இல்லாமல் வீடுவீடாக தனிமையில் சென்று வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம் கீழக்காவட்டாங்குறிச்சி ஊராட்சியில் கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 10 வேட்பாளர்களும், வார்டு எண் 1-ல் உறுப்பினர் பதவிக்கு 4 வேட்பாளர்களும், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவிக்கு 5 வேட்பாளர்களும், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு 3 வேட்பாளர்களும் என 22 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில், கீழக்காவட்டாங்குறிச்சி வார்டு எண்-1 ல் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள சின்னங்களை குறிக்கும் வகையில் பரிசு பொருட்களையும், சிலர் மாற்று பரிசு பொருட்களையும் அப்பகுதியில் வசிக்கும் வாக்காளர்களுக்கு கடந்த சில தினங்களாக விநியோகம் செய்து வந்துள்ளனர்.

இதில், வார்டு எண்-1 ல் வசிக்கும் தையல் தொழிலாளி பச்சமுத்து(48) என்பவரின் வீட்டில் உள்ள 6 வாக்குகளுக்கும் வேட்பாளர்கள் பரிசு பொருட்களை வழங்கியுள்ளனர். இதனால் மனக்குழப்பத்துக்கு ஆளான பச்சமுத்து, வேட்பாளர்கள் வழங்கிய குத்துவிளக்கு உள்ளிட்ட பரிசு பொருட்களை அங்குள்ள மாரியம்மன் கோயிலில் வைத்து, விழுந்து கும்பிட்டுவிட்டு கோயிலுக்கு அந்த பரிசு பொருட்களை ஒப்படைத்து சென்றார். நடவடிக்கை எடுக்க வேண்டும்: இதுகுறித்து பச்சமுத்து கூறுகையில், ‘‘இங்கு போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும் எனக்கு நன்கு அறிந்தவர்கள்.

ஆனால், தங்களுக்கு கட்டாயம் வாக்களிக்க வேண்டும் எனக்கூறி சிலர் பரிசு பொருட்களை அளித்து செல்கின்றனர். வேண்டாம் என்று கூறினால், அப்போ எனக்கு வாக்களிக்க மாட்டாயா என சந்தேகப்படுகின்றனர். இதனால் கடந்த 4 நாட்களாக மன குழப்பத்துக்கு ஆளாக்கப்பட்டுள்ளேன். எனவே, எனக்கு வழங்கிய 5 காமாட்சி அம்மன் விளக்குகள், 3 குத்து விளக்குகள், 3 வெள்ளி தட்டுகள் ஆகிய பரிசு பொருட்களை கோயிலில் ஒப்படைத்தேன். இதுபோல பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’’ என்று வலியுறுத்தினார்.

Tags : voter ,miracle ,Ariyalur , Ariyalur, surprise candidates, gift, temple, voter
× RELATED சித்தேரி கரையை சமூக விரோதிகள் உடைப்பு:...