×

மக்கள் நலனை கருத்தில் கொண்டு பொருளாதார திட்டங்களை மத்திய அரசு வகுக்க வேண்டும்: திருமாவளவன் வேண்டுகோள்

சென்னை: இந்திய பொருளாதார வீழ்ச்சியை கட்டுப்படுத்த மத்தியஅரசு, மக்கள் நலனை மையமாகக்கொண்டு திட்டங்களை வகுக்க வேண்டும் என்று திருமாவளவன் கூறியுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்ட அறிக்கை: இந்திய பொருளாதாரம் சரிவில் சென்று கொண்டிருப்பதாகவும் பொருளாதார வளர்ச்சி கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவில் 4.5% ஆக குறைந்திருப்பதாகவும் சர்வதேச செலாவணி நிதியம் அறிவித்துள்ளது. பொருளாதார வீழ்ச்சியை பொருளாதார வல்லுனர்கள் மட்டுமல்ல, மக்களும் நடைமுறையில் உணர்ந்து வருகிறார்கள்.

இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே காய்கறி விலை விண்ணை தொட்டிருப்பதும், பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவதும், அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கு கூட முடியாமல் மக்கள் அல்லல்படுவதும் நாட்டின் பொருளாதாரம் எங்கே சென்றுக்கொண்டிருக்கிறது என்ற கேள்வியை எழுப்புகிறது. பணமதிப்பு நீக்க நடவடிக்கையினாலும் ஜிஎஸ்டி வரிவிதிப்பினாலும் சிறுதொழில் நிறுவனங்கள் சிறுவணிகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது, முதலீட்டாளர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்திருக்கிறது.

நாட்டின் பொருளாதாரம் அதல பாதாளத்திற்கு சென்று கொண்டிருக்கிறது, லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலை வாய்ப்பை இழந்து வருகிறார்கள், மோடி அரசின் பொருளாதார கொள்கை படுதோல்வியை சந்தித்திருக்கிறது என கடந்த சில ஆண்டுகளாகவே எச்சரித்து வருகிறோம். இந்திய மக்களின் நலன்களை அடிப்படையாக கொள்ளாமல் கார்ப்பரேட் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் நலன்களை மையமாகக் கொண்டே மோடி அரசின் பொருளாதாரக் கொள்கை வரையறுக்கப்படுவதுதான் இன்றைய பொருளாதார நலிவுக்கு முக்கிய காரணம்.

காஷ்மீர் சிறப்பு உரிமை ரத்து, குடியுரிமைத் திருத்தச் சட்டம் ஆகியவற்றின் மூலம் முஸ்லிம் வெறுப்பு அரசியலை முன்னெடுத்து பொருளாதார வீழ்ச்சியைத் திசைதிருப்ப மோடி அரசு முயற்சிக்கிறது. மத்திய அரசு பொருளாதார  வீழ்ச்சியைக் கட்டுப்படுத்தி, இந்திய பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல மக்கள் நலனை மையமாகக்கொண்டு உடனடியாக கொள்கை முடிவுகளையும், திட்டங்களையும் வகுக்க வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : government ,Thirumavalavan , Public Welfare, Economic Planning, Central Government, Thirumavalavan, Request
× RELATED ஒன்றிய அரசு குறித்து அமெரிக்கா மீண்டும் விமர்சனம்