×

காந்திஜி நாடு ஹிட்லர் பாதையில் செல்வதை நினைத்தால் தூக்கம் வர மறுக்கிறது: குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நடந்த கருத்தரங்கில் ப.சிதம்பரம் பேச்சு

சென்னை: தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பாக சர்வதேச கோட்பாடுகளுக்கு மாறாக குடியுரிமை சட்டத்தை திணித்ததை கண்டித்து கருத்தரங்கம் சைதாப்பேட்டையில் நேற்று மாலை நடந்தது. இதில் ப.சிதம்பரம், கனிமொழி, திருமாவளவன் கலந்து கொண்டு பேசினர். இந்த கருத்தரங்கிற்கு பேராசிரியர் அருணன் தலைமை வகித்தார். பேராயர் தேவசகாயம், பி.சம்பத், கோபண்ணா, எஸ்.டி. நெடுஞ்செழியன், வன்னியரசு, ஆவடி அந்திரிதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காயிதே மில்லத் கலை, மற்றும் அறிவியல் கல்லூரி தாளாளர் தாவூத் மியாகான் வரவேற்றார்.  

இந்த கூட்டத்தில், முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் பேசும்போது, குடியுரிமை சட்டம் இயற்றி 15 நாட்களில் நாடு பெரிய புரட்சியை சந்தித்தது. இதற்கு காரணம் அரசியல் கட்சிகள் அல்ல. நான் அல்ல. எங்கள் கட்சியும் அல்ல. மாணவர்கள், இளைஞர்கள் தான் தலைமையின்றி தன்னிச்சையாக போராடி வருகின்றனர். சாதி, மதம், அமைப்பு என பல பிரிவுகளாக பிளவுபட்டு இருந்த மாணவர்கள் இந்த குடியுரிமை  சட்டத்திற்கு எதிராக வேறுபாடுகளை மறந்து போராடி வருகின்றனர்.  மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன்.

இந்த போராட்டம் மங்கிவிடாமல் தொடர்ந்து உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டும். இந்த சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிரானது என நாம் எண்ணிவிடக்கூடாது, நாம் அவ்வாறு தான் நம்ப வேண்டும் என நினைகிறார்கள். அது இந்தியா எனும் ஒற்றுமையயே குலைக்கும். அசாமில் 19 லட்சம் பேர் குடிமக்கள் இல்லை என அறிவித்தால் எந்த நாடும் அவர்களை ஏற்காது. மேலும் அவர்களுக்கு சிறை சென்றால் 24 ஆயிரம் கோடி செலவாகும். வாழ்க்கை முழுவதும் சிறையில் அடைக்க முடியுமா. நாஜி பாதையில் இந்தியா செல்கிறது.

காந்திஜி நாடு ஹிட்லர் பாதையில் செல்வதை நினைத்தாலே தூக்கம் வர மறுகிறது. இந்துகளை அனுமதிப்போம். ஆனால் தமிழ் இந்துகளை அனுமதிக்கமாட்டோம். கிறிஸ்தவர்களை அனுமதிப்போம். ஆனால் பூட்டான் கிறித்தவர்களை அனுமதிக்கமாட்டோம் என அபத்தமான வாதத்தை முன் வைக்கிறார்கள் என்றார். மேலும் இதில் திமுக எம்பி கனிமொழி, சி.பி.எம் கட்சியின் அரசியல் தலைமைகுழு உறுப்பினர் பிரகாஷ் காரத், திருமாவளவன் ஆகியோர் பேசினர்.

Tags : Gandhi ,P Chidambaram ,Hitler ,seminar , Gandhiji, Hitler's Path, Sleep, Citizenship Law, Opposition, Seminar, PC Chidambaram Talk
× RELATED பாஜக தேர்தல் அறிக்கையில் புதிய அறிவிப்புகள் இல்லை: ப.சிதம்பரம் பேட்டி