×

ஆந்திராவுக்கு மூன்று தலைநகரம் ஜெகன் மோகன் இன்று இறுதி முடிவு

திருமலை: ஆந்திராவில் 3 தலைநகரங்கள் அமைப்பது குறித்து முதல்வர் ஜெகன் மோகன் தலைமையில் இன்று இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது. ஆந்திர மாநில உள்துறை அமைச்சர் சுச்சரித்தா நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: டிஷா  சட்டத்தை அமல்படுத்துவது குறித்து முதல்வர் ஜெகன் மோகன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், பெண்களுக்கு எதிரான குற்றங்களை விரைவாக விசாரித்து, குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க, அனைத்து  மாவட்டங்களிலும் விரைவு நீதிமன்றம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தலா ₹2 கோடி ஒரு வாரத்திற்குள் ஒதுக்கீடு செய்ய முதல்வர் உத்தரவிட்டார்.  மேலும், மாநிலத்தில் போலீசாருக்கான தடயவியல்  ஆய்வக பரிசோதனை மையம் ஒன்று மட்டுமே உள்ளதால், மேலும் மூன்று தடயவியல் மற்றும் ஆய்வு மையம் அமைக்க 23 கோடி நிதி ஒதுக்கி செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் பெண்களுக்கான சிறப்பு காவல் நிலையம்  அமைக்கப்பட உள்ளது.

சட்டப்பேரவை, சட்ட மேலவையில் டிஷா சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அது இன்னும் ஒரு வாரத்திற்குள் அனுமதி பெற்று அரசிதழில் வெளியிடப்படும். ஆந்திராவுக்கு மூன்று தலைநகரங்கள்  அமைப்பது குறித்து நாளை (இன்று) அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் முதல்வர் ஜெகன் மோகன், அரசின் முடிவை அறிவிக்க உள்ளார். மாநிலத்தில் சம வளர்ச்சி அடைய வேண்டும் என்ற  நிலைப்பாட்டில் அரசு உள்ளது. தலைநகர் அறிவிப்பிற்கு சட்டத்திற்கு புறம்பாக யார் செயல்பட்டாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

தேவைப் பட்டால் பந்த்:
இதற்கிடையே தெலுங்கு தேசம் கட்சியின் முன்னாள் அமைச்சர் பத்திபாட்டி புல்லா ராவ் நிருபர்களிடம் கூறுகையில், `நாளை (இன்று) நடைபெறக்கூடிய அமைச்சரவை கூட்டத்தில் அமராவதிக்கு நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு உரிய நியாயம்  செய்யாமல்  தலைநகர் மாற்றம் செய்வது போன்று அறிவித்தால் நாளைமறுதினம் (நாளை) முழு பந்திற்கு அழைப்பு விடுக்கப்படும்’’ என்றார்.

Tags : Jagan Mohan ,capital ,finalist ,Andhra Pradesh , Andhra, three capitals, Jagan Mohan
× RELATED ஆந்திர முதல்வர் மீது கல்வீச்சு: துப்பு கொடுத்தால் சன்மானம்