×

சபரிமலை கோயிலில் இன்று மண்டல பூஜை: பக்தர்கள் குவிந்தனர்

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயில் இன்று மண்டல பூஜை நடக்கிறது. இதையொட்டி ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.  சபரிமலை ஐயப்பன் கோயிலில் இந்த ஆண்டு மண்டலக் கால பூஜைகள் நவம்பர் 17ம்  தேதி  தொடங்கின. 41 நாட்கள் நடைபெறும் மண்டல காலம் இன்று நிறைவடைகிறது. இன்று காலை 10.11க்கும், 11.40க்கும் இடையே மண்டல பூஜை  நடக்கிறது.  மண்டல பூஜையை முன்னிட்டு ஐயப்பனுக்கு தங்க அங்கி  அணிவிக்கப்படுகிறது.  இதற்காக தங்க அங்கி ஊர்வலம் கடந்த 23ம் தேதி ஆரன்முளா  பார்த்தசாரதி கோயிலில் இருந்து தொடங்கியது. நேற்று (26ம் தேதி) தங்க அங்கி  சன்னிதானத்தை அடைந்தது. நேற்று மாலை ஐயப்பன் விக்ரகத்தில் தங்க அங்கி   அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடத்தப்பட்டது. இன்று  மண்டல பூஜை நடக்கிறது.  பின்னர் இரவு 10 மணிக்கு நடை சாத்தப்படுகிறது. மீண்டும் மகர விளக்கு  பூஜைகளுக்காக வரும் 30ம் தேதி  மாலை 5 மணிக்கு ேகாயில் நடை  திறக்கப்படும்.

இதற்கிடையே நேற்று சூரிய கிரகணத்தையொட்டி சபரிமலை ஐயப்பன் கோயில் காலை 7.45 மணிக்கு நடை சாத்தப்பட்டது. ஆனால், இந்நேரத்தில்  பக்தர்கள் 18ம் படி ஏற அனுமதிக்கப்பட்டனர். சூரிய கிரகணத்துக்கு பின்னர்  11.30 மணிக்கு  கோயில் நடை திறக்கப்பட்டது. அதன்பிறகு பரிகார பூஜைகள்  நடத்தப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். சூரிய கிரகணத்தையொட்டி சபரிமலையில் நேற்று பக்தர்கள் கூட்டம் சற்று குறைவாகவே காணப்பட்டது.

வருவாய் 156 கோடி:
சபரிமலையில் நேற்று, திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் வாசு கூறியதாவது: இந்த மண்டல காலத்தில் கடந்த 39 நாளில் கோயில் மொத்த வருமானம் 156.60 கோடி ஆகும். கடந்த வருடம் இதே நாளில் 105.29 கோடி ரூபாயாகும்.  அரவணை பிரசாதம் விற்பனை மூலம் தான் அதிகமாக 67.76 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.  கடந்த வருடம் இது 40.98 கோடி ரூபாயாகும். உண்டியல் மூலம் 53.14 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. மேலும் மணியாடர் மூலம் 80 ஆயிரத்து 580  ரூபாய் காணிக்கை வந்துள்ளது.

Tags : Mandala Pooja ,Sabarimala Temple , Sabarimala Temple, Mandala Pooja
× RELATED சித்திரை விஷு சபரிமலை கோயில் நடை நாளை திறப்பு