×

இன்று முதல்கட்ட உள்ளாட்சி தேர்தல்

* 7 மணிக்கு துவங்குகிறது
* பாதுகாப்பு பணியில் 60 ஆயிரம் போலீசார்

சென்னை: தமிழகத்தில் 156 ஊராட்சி ஒன்றிங்களில் இன்று காலை 7 மணி முதல் 5 மணி வரை முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான பாதுகாப்பு பணியில் 60 ஆயிரத்திற்கு மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தபட்டுள்ளனர். தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களைத் தவிர்த்து 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் 2 கட்டமாக நடைபெறுகிறது. முதல்கட்டமாக 156 ஊராட்சி ஒன்றியங்களிலும், 2வது கட்டமாக 158 ஊராட்சி ஒன்றியங்களிலும் தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9ம் தேதி தொடங்கி கடந்த 16ம் தேதி நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட வேட்பாளர் பட்டியல் படி 2 லட்சத்துக்கு 31 ஆயிரத்து 890 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர். இதன்படி முதல் கட்ட தேர்தல் நடைபெறும் 156 ஊராட்சி ஒன்றிங்களில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. காலை 7 முதல் மாலை 5 மணி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 260 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவி, 2546 ஒன்றிய குழு உறுப்பினர் பதவி, 4700 ஊராட்சி தலைவர் பதவி, 37,830 ஊராட்சி உறுப்பினர் பதவி என மொத்தம் 45,336 பதவிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இந்த தேர்தலில் 1.28 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதற்காக 24 ஆயிரத்து 680 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 1 லட்சத்து 40 ஆயிரத்துக்கு மேற்ப்பட்ட வாக்குப் பெட்டிகள் பயன்படுத்தபடவுள்ளன. ஒரு வாக்குச்சாவடிக்கு 7 முதல் 8 அலுவலர்கள் வீதம் 2 லட்சத்துக்கு மேற்பட்ட ஊழியர்கள் தேர்தல் பணயில் ஈடுபடவுள்ளனர். தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் நேற்று பணி ஆணை வழங்கப்பட்டது. மேலும் வாக்குச்சாவடி தலைமை அலுவலர் தலைமையில் அனைத்து பொருட்களும் வாக்குச்சாவடிக்கு அனுப்பி வைக்கப்பட்டன. வாக்குச் சாவடிக்கு சென்ற அலுவலர்கள் அந்த வாக்குச்சாவடியில் அனைத்து விதமான வசதிகளும் செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்துவிட்டு மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு தகவல் அளித்தனர். தேர்தல் பாதுகாப்பு பணியில் காவலர்கள், ஆயுத படை காவலர்கள், ஊர்காவல் படையினர், முன்னாள் ராணுவத்தினர் உள்ளிட்ட 63 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர்.

பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர். மேலும் அந்த வாக்குச்சாவடியில் நடைபெறும் வாக்குப்பதிவு முழுவதுமாக வீடியோ பதிவு செய்ய மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவை கண்காணிக்க நுண் பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதைத்தவிர்த்து சென்னையில் உள்ள மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்திலிருந்து வெப் ஸ்ட்ரீமிங் மூலம் கண்காணிக்கவும், பதிவு செய்யவும் மாநில தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.

Tags : election , Today, first local election
× RELATED வடசென்னையில் வேட்புமனு தாக்கல்...