×

9 ஆண்டுகளுக்கு பிறகு வானில் அரிய நிகழ்வு நெருப்பு வளைய சூரிய கிரகணம்

* தமிழகத்தில் 90 சதவீதம் முழுமையாக தெரிந்தது
* லட்சக்கணக்கானோர் கண்டுகளித்தனர்

சென்னை: நெருப்பு வளையம் கொண்ட சூரிய கிரகணம் 9 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று நிகழ்ந்தது. அரிய நிகழ்வான  இந்த கிரகணம் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தெரிந்ததால் லட்சக் கணக்கானோர் நேற்று இதை பார்த்து ரசித்தனர். சந்திரனுக்கும், பூமிக்கும், சூரியனுக்கும் நேர்க் கோட்டுப் பாதையில் அமையும் போது சூரிய கிரகணம் நடக்கிறது. வானில், பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் நேற்று சந்திரன் வந்ததால் இந்த கிரகணத்தை பார்க்க முடிந்தது.  சந்திரன் சூரியனை மறைத்த நேரத்தில் சூரியனின் விளிம்பு பகுதி மட்டும் வெளியில் வட்டமாக நெருப்பு வளையமாக தெரிந்தது. இது போல கடந்த 2010ம் ஆண்டு ஜனவரி 15ம் தேதி ஒரு நெருப்பு வளைய சூரிய கிரகணம் தமிழகத்தில் தெரிந்தது. அதற்கு பிறகு நேற்று நடந்தது. இந்த நெருப்பு வளைய கிரகணம் நேற்று காலை 8.08 மணிக்கு தொடங்கியது. சந்திரன் மெல்ல மெல்ல சூரியனை மறைக்கத் தொடங்கியது. 9.27 மணி அளவில் முழுமையாக சூரியனை மறைத்தது. பின்னர் மெல்ல மெல்ல விடுபடத் தொடங்கியது. இந்த கிரகணம் சென்னை, மதுரை, திருச்சி,
புதுக்கோட்டை, ஊட்டி போன்ற பல்வேறு இடங்களில் தெளிவாக தெரிந்தது. கோவை, ஈரோடு, திருப்பூர் பகுதிகளில் சரியாக தெரியவில்லை. மதுரையில் மட்டும் முழுமையாக தெரிந்தது. இதைப் பார்க்க நாடு முழுவதும் பொதுமக்கள் ஆர்வமாக காத்திருந்தனர். கிரகணத்தால் பாதிப்பு ஏற்படும் என்று அஞ்சியவர்கள் வீட்டுக்குள் முடங்கினர். இந்த அரிய நிகழ்வை காண்பதற்காக வெளியில் வந்தவர்களுக்கு அந்தந்த பகுதியை சேர்ந்த பல்வேறு தன்னார்வ அமைப்புகள் உதவின.

அறிவியல் அறிஞர்கள், அமைப்புகளும் இதில் பங்கேற்றன. பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் இந்த சூரிய கிரகணத்தை பார்க்க குவிந்தனர். அவர்களுக்கு அறிவியல் அறிஞர்கள் விளக்கம் அளித்தனர். கிரகணம் எப்படி ஏற்படுகிறது என்பதை செயல்முறையில் செய்து காட்டி அசத்தினர். பொதுமக்களும் மாணவர்களும் அதை ஆர்வமுடன் பார்த்தனர். இந்த கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கூடாது என்று அறிவியல் அறிஞர்கள் ஏற்கெனவே அறிவித்து இருந்ததால், சன் கிளாஸ் என்னும் சூரியக் கண்ணாடிகள் வழியாக கிரகணத்தை பார்த்தனர். சென்னையில் அறிவியல் இயக்கம் சார்பாக மெரினா கடற்கரையிலும், சென்னை கோட்டூர் புரத்தில் உள்ள கோளரங்கத்திலும் பொதுமக்கள் பார்க்க சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.  காலையில் 8 மணிக்கு சூரிய கிரகணம் தோன்றும் என்பதால் கோளரங்கம், மெரினா கடற்கரையில் பொதுமக்கள், மாணவர்கள் குவிந்தனர்.  அவர்களுக்கு சூரியக் கண்ணாடிகள் இலவசமாக வழங்கப்பட்டது.

காலை 8.08 மணி அளவில் சந்திரன் சூரியனை மறைக்கத் தொடங்கியது. 9.27 மணி அளவில் முழுமையாக சந்திரன் சூரியனுக்கு நேரே வந்து சூரியனின் மையப்பகுதியை மறைத்தது. அப்போது சூரியனின் விளிம்புப் பகுதி நெருப்பு வளையம் போல தெரிந்தது. சூரியக் கிரகணத்தின் போது சாப்பிடக்கூடாது என்ற வழக்கம் இருப்பதால் பொதுமக்கள் காலையில் 7 மணிக்கு முன்னதாகவே தங்களின் சிற்றுண்டியை முடித்துக் கொண்டனர். பெரும்பாலானவர்கள் வெளியில் வரவில்லை. கோயில்கள் மூடப்பட்டன. கோயிலுக்கு பொதுமக்கள் வராமல் போனதால், கோயில்களை சுற்றியுள்ள கடைகளும் அடைக்கப்பட்டன. இதனால் கோயில் வளாகங்கள் வெறிச்சோடின. கிரகணம் முடிந்த பிறகே பொதுமக்கள் வெளியில் வந்தனர்.
சென்னை உள்ளிட்ட பெரிய நகரங்களில் வாகனங்கள் பெருமளவில் இயங்கவில்லை. தனியார் நிறுவனங்களில் ஊழியர்கள் குறைவாகவே பணிக்கு வந்தனர்.

இந்த நெருப்பு வளைய கிரகணம் குறித்து அறிவியல் அறிஞர்கள் கூறியதாவது: ஒரு வருடத்தில் 7 கிரகணங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதில் 4 அல்லது 5 சூரிய கிரகணங்களும் நடப்பதற்கு வாய்ப்புள்ளது. குறைந்தபட்சம் ஒரு வருடத்தில் 2 சூரிய கிரகணங்கள் நடக்கும் அதே நேரத்தில் ஒரு சந்திர கிரகணம் கூட நடக்காமல் இருக்க வாய்ப்புள்ளது. சூரிய கிரகணத்தை பொறுத்தவரையில் பகுதி கிரகணம், வளை கிரகணம், முழு சூரிய கிரகணம், கலப்பு கிரகணம் ஆகியவை நடக்கும். நேற்று நடந்தது முழு சூரிய கிரகணம். அதில் சூரியனை நிலவு முழுமையாக மறைக்கும் போது இது தோன்றும். இது பூமியில் அரிதாக நடக்க கூடிய ஒன்று. இந்த நிகழ்வு பார்ப்பவர்களை பிரமிப்பூட்டும். முக்கியமான அறிவியல் பரிசோதனைகள் இந்த சமயத்தில் மேற்கொள்ள முடியும். இதுபோன்ற சூரிய கிரகணத்தின் போது சூரிய பிம்பத்தை திரையில் பிடித்து பார்ப்பதே நல்லது. வெறும் கண்களால் பார்க்க கூடாது. அதனால் பொதுமக்களுக்கு சூரிய கண்ணாடிகள் வழங்கி பார்க்க வைக்கிறோம். கடந்த 25 ஆண்டுகளில் இந்தியாவில் 4  முழு சூரிய கிரகணம், ஒரு வளைய கிரகண நிகழ்வும் நடந்துள்ளது. சூரிய கிரகணத்தின் ேபாது வெளியில் வரக்கூடாது, கர்ப்பிணிப் பெண்கள் வெளியில் வரக்கூடாது, சாப்பிடக்கூடாது, கிரகணம் முடிந்த பிறகுதான் குளிக்க வேண்டும் என்று சொல்வது சரியல்ல. இது சாதாரண நிகழ்வுதான். மற்ற நேரங்களில் இருப்பது போல் இருக்கலாம். இது போன்று மீண்டும் 2031 ம் ஆண்டு நிகழ வாய்ப்புள்ளது என்று தெரிவித்தனர். கிரகணத்தின் போது சாப்பிடக்கூடாது  என்ற வழக்கம் இருப்பது தவறான கருத்து என்பதை காட்ட பல்வேறு இடங்களில் சிலர் உணவு உண்டு, அதனால் பாதிப்பில்லை என்று விளக்கம் அளித்த நிகழ்வுகள் அரங்கேறின.

அறிவியல் அறிஞர்களும்  சாப்பிடுவது, தண்ணீர் குடித்தும் செயல் விளக்கம் அளித்தனர். மேலும், தொலை நோக்கி மூலம் சூரிய கிரகணத்தை உள் வாங்கி அதை ஒரு திரையில் தெரியும்படி காட்டினர். சாதாரண கண்ணாடியின் மூலம் சூரிய ஒளியை பிரதிபலித்தும் காட்டினர். அதை பொதுமக்கள் பார்த்து ரசித்தனர். காலை 8 மணிக்கு தொடங்கிய இந்த சூரிய கிரகணம் 11 மணி வரை நீடித்தது. முழுமையான கிரகணம் என்பது 3 நிமிடம் 11 வினாடிகள் நீடித்தது. தமிழகத்தில் மதுரை, கோவை, ஈரோடு, கரூர்,  திண்டுக்கல், சிவகங்கை, திருச்சி, புதுக்கோட்டை, ஆகிய இடங்களிலும்  தெரிந்தது. மதுரையில் சிவப்பு நிறத்திலும், சென்னை, புதுச்சேரியில் பச்சை  நிறத்திலும் கிரகணம் தெரிந்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
இது போல் ஒவ்வொரு  பகுதியில் வெவ்வேறு நிறத்தில் தெரிந்ததாக கூறப்படுகிறது. கடந்த 9 ஆண்டுகளுக்குப் பின்னர் நேற்று நிகழ்ந்த சூரிய கிரகணம், தமிழகத்தைப் பொறுத்தவரை மக்களின் பெரிய விவாதப் பொருளாகவே அமைந்தன.

சாப்பிடக்கூடாதா?

பிர்லா கோளரங்கில் நேற்று தொலைநோக்கி மூலம் மாணவர்களுக்கு சூரிய கிரகணம்  காட்டப்பட்டது. அதுதொடர்பாக பிர்லா கோளரங்கத்தின் செயல் இயக்குனர்  (பொறுப்பு) சவுந்தரராஜ பெருமாள் கூறியதாவது: பிர்லா கோளரங்கத்தில் சூரிய  கிரகணத்தை மாணவர்கள் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காலை முதலே  குழந்தைகள், பெரியவர்கள் என வயது வித்தியாசம் இன்றி ஏராளமானோர் கூடினர். சூரிய  கிரகணத்தின்போது உணவு சாப்பிடக்கூடாது, உணவு கெட்டுப்போகும் என்பதற்கு  அறிவியல்பூர்வமாக எந்த ஆதாரமும் இல்லை. கிரகணத்தின்போது வெளியில்  செல்லக்கூடாது என்று சொல்வதற்கும் அறிவியல் பூர்வமாக எந்த காரணமும் இல்லை.

ஆண்டுக்கு 3 முதல் 5 முறை சூரிய  கிரகணம் ஏற்படும். அப்போது சந்திரனின் ஒரு பகுதி சூரியனை மறைக்கும். ஆனால்  வளைய சூரிய கிரகணம் என்பது எப்போதாவது ஏற்படும் ஒரு அரிய நிகழ்வு. வளைய  சூரிய கிரகணத்தின்போது, சந்திரன் முழுமையாக சூரியனை மறைக்கும். அப்போது ஒரு  நெருப்பு வளையம் போல சூரியன் தெரியும். இந்த சூரிய கிரகணம்  கர்நாடகாவின் தென்பகுதி, கேரளாவின் வடபகுதி, தமிழகத்தின் நீலகிரி முதல்  புதுக்கோட்டை மாவட்டம் வரையிலான பகுதியில் தெளிவாக தெரிந்தது. அடுத்ததாக  2020ம் ஆண்டு ஜூன் 2ம் தேதி சூரிய கிரகணம் ஏற்படும். அடுத்த வளைய சூரிய  கிரகணம் 2034ம் ஆண்டு தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.

ஊட்டியில் 95% சூரிய கிரகணம்

சூரிய கிரகணத்தை  இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தின் சில பகுதிகளில் தெளிவாக காண முடியும்  எனவும், அந்த சில பகுதிகளில் ஊட்டியும் ஒன்று என தெரிவிக்கப்பட்டிருந்தது.  அதன் படி 95 சதவீதம் கிரகணம் தெரிந்தது. 9.30 மணியில் இருந்து பகுதி சூரிய மறைப்பு  நிகழ்வுடன் 11.09 மணியளவில் கிரகணம் முடிவடைந்தது. இந்த கிரகணத்தை  ஏராளமானோர் கண்டு களித்தனர்.

கன்னியாகுமரி: தமிழ்நாடு  அறிவியல் இயக்கம் சார்பில் காலை 8 மணி முதல் 11.30 மணி வரை கன்னியாகுமரி  கடற்கரையில் திரிவேணி சங்கமம் பகுதியில் சூரிய கிரகணத்தை காண சிறப்பு  ஏற்பாடுகள் செய்யப்பட்டன. சூரிய கிரகணத்தை காண வந்தவர்களுக்கு பிரத்யேக  கண்ணாடிகளையும் அவர்கள் வழங்கினர். சூரியனின் பிம்பத்தை கருப்பு தாளில் விழ  வைத்தும் மக்களுக்கு காண்பித்தனர். இதை ஏராளமான மாணவ, மாணவிகள்,  பொதுமக்கள் கண்டுகளித்தனர்.

பல நாடுகளில் தெரிந்தது

இந்தியா மட்டுமின்றி, உலகம் முழுவதும் பல்வேறு மாநிலங்களில் நேற்று நடந்த நெருப்பு வளைய சூரிய கிரகணம் தெரிந்தது. இந்தியாவில் கேரளா, கர்நாடகா, ஒடிசா, குஜராத், மகாராஷ்டிரா, டெல்லி உ்ட்பட பல்வேறு மாநிலங்களில் முழுமையாகவும், பகுதியாகவும் இது தெரிந்தது. மக்கள் இதை பார்ப்பதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. கேரளாவில், காசர்கோடு, கோழிக்கோடு,  திருவனந்தபுரம், கோட்டயம்,  கொச்சி உட்பட பல்வேறு பகுதிகளில் கிரகணம் தெளிவாக தெரிந்தது. பல பகுதிகளில் 90 சதவீத கிரகணம் தெரிந்ததை மக்கள் ஆர்வத்துடன் கண்டு களித்தனர். ஆனால், கர்நாடகாவின் பிற பகுதியில் இந்த அளவுக்கு தெளிவாக சூரியகிரகணத்தை பார்க்க முடியவில்லை.

வெளிநாடுகளில் ஐக்கிய அரபு அமீரகம் அபுதாபியில் காலை 7.35 மணிக்கு தொடங்கி 7.38 மணி வரை கிரகணம் தெரிந்தது. துபாயில் முஷ்ரிப் பூங்கா பகுதியில் அமைந்துள்ள அல்-துரயா வானியல் மையத்தில் சூரிய கிரகணத்தை காண பொதுமக்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சிங்கப்பூர், இலங்கை உட்பட பல்வேறு நாடுகளிலும் கிரகணம் தெளிவாக தெரிந்தது. கொழும்பு பல்கலைக் கழகத்தில் சிறப்பு தொலைநோக்கிகள் மூலம் ஏராளமான மக்கள் கிரகணத்தை பார்த்து ரசித்தனர். யாழ்ப்பாணத்தில் அதிகபட்சமாக 87 சதவீதமும், கொழும்புவில் 84 சதவீதமும் கிரகணம் காட்சியளித்தது.

Tags : eclipse ,sky ,event , A rare event , sky after 9 years,solar eclipse
× RELATED நூறு ஆண்டுகளுக்கு பிறகு இன்று...