×

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க போராடிய வழக்கில் திருமாவளவன் நீதிமன்றத்தில் ஆஜர் : விசாரணை ஜன.17க்கு ஒத்திவைப்பு

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரிய வழக்கில்  விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆஜரானார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தரப்பில் வழக்கறிஞர் ஆஜராகினர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி கடந்த 2018, ஏப்ரல் மாதம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில், அப்போதைய தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, இந்தியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொய்தீன், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கராத்தே தியாகராஜன் உள்பட ஆயிரத்துக்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். இந்நிலையில் இந்த போராட்டம் அனுமதி இல்லாமல் நடந்ததாக கூறி மு.க.ஸ்டாலின், திருநாவுக்கரசர், திருமாவளவன், ஜவாஹிருல்லா, காதர் மொய்தீன், சரத்குமார், கராத்தே தியாகராஜன் உள்ளிட்ட 7 பேர் மீதும், இந்திய தண்டனை சட்டத்தின்படி அனுமதியின்றி கூடுதல், பொதுமக்களுக்கு இடையூறு செய்தல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் ஆகிய பிரிவுகளிலும் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழும் திருவல்லிக்கேணி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கு சென்னை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் கூடுதல் சிறப்பு நீதிமன்றத்தில் விசரணைக்கு வந்தது. அப்போது வரும் 26ம் தேதி(நேற்று) மு.க.ஸ்டாலின், திருமாவளவன், திருநாவுக்கரசு உள்ளிட்ட 7 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராக சம்மன் அனுப்பி இருந்தது. அதன்படி, வழக்கு நேற்று மீண்டும், நீதிபதி ரமேஷ் முன்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, விசிக தலைவர் திருமாவளவன், கராத்தே தியாகராஜன் ஆகியோர் ஆஜராகினர். அவர்களிடம் நீதிபதி வழக்கு குறித்து தெரிவித்து நகலை வழங்கினார்.
பின்னர், நீதிபதி மற்ற தரப்பில் ஆஜராகியிருக்கும் வக்கீல்கள் மனு தாக்கல் செய்து, வழக்கு நகலை பெற்றுக்கொள்ளுமாறு கூறினார். ஆனால் ஸ்டாலின் தரப்பில் ஆஜரான வக்கீல்கள், தங்களுக்கு எந்த சம்மனும் வரவில்லை, சம்மன் வராமல் நகலை எப்படி பெறுவது என்று கூறி நகலை பெறவில்லை. இதனையடுத்து காங்கிரஸ் தரப்பில் ஆஜரான வக்கீல் மனுதாக்கல் செய்து, நகலை பெற்றுக்கொண்டார். பின்னர் நீதிபதி வழக்கு விசாரணையை வரும் 17ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

போராடாத சரத்குமார் மீது வழக்கா?

வழக்கு விசாரணையின் போது, ஆஜரான முன்னாள் எம்எல்ஏ ஒருவர் நீதிபதியிடம், இந்த போராட்டத்தில் சரத்குமார் கலந்துகொள்ளவில்லை. ஆனால் அவர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு, சம்மன் அனுப்பட்டுள்ளது. இது எப்படி என்று நீதிபதிக்கு கேள்வி எழுப்பி சர்ச்சையை எழுப்பினார்.

Tags : court ,Thirumavalavan ,management board ,Cauvery , Thirumavalavan appeals ,Cauvery case
× RELATED உச்ச நீதிமன்றம் கண்டித்தபிறகும்...