×

ஏரிகளை ஆக்கிரமித்தால் கிரிமினல் நடவடிக்கை பாயும் : சமூக விரோதிகளுக்கு முதன்மை தலைமை பொறியாளர் எச்சரிக்கை

சென்னை: ஏரிகளை ஆக்கிரமித்தால் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரித்துள்ளது. தமிழகத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 14,098 ஏரிகள் உள்ளது. இந்நிலையில் நகர மயமாதல் காரணமாக இந்த ஏரிகளை ஆக்கிரமித்து பலர் குடியிருப்புகளை கட்டி வருகின்றனர். இதனால், ஏரிகளின் பரப்பளவு சுருங்கி கொண்டே வருகிறது. தற்போது பெரும்பாலான ஏரிகள் சுருங்கி குட்டையாகவே காட்சியளிக்கிறது. இதற்கு, ஏரிகளின் ஆக்கிரமிப்பவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருவதே முக்கிய காரணம் எனக்கூறப்படுகிறது. இதை தடுக்க வேண்டிய அரசும் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் வேடிக்கை பார்த்து வந்தது. இதனால், தமிழகம் முழுவதும் 10,670 ஏரிகள் ஆக்கிரமிப்பில் பிடியில் சிக்கியிருப்பதாக தெரிகிறது. அதே நேரத்தில் 3,482 ஏரிகள் மட்டுமே ஆக்கிரமிப்பாளர்களிடம் சிக்காமல் பாதுகாப்பாக இருப்பதாகவும் தெரிகிறது. இந்த நிலையில் கடந்த 2015 டிசம்பரில் பெய்த கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களில் நீர்நிலைகளில்  கட்டப்பட்ட பெரும்பாலான கட்டிடங்களால் தண்ணீர் செல்ல வழியில்லாமல் குடியிருப்புகளுக்கு வெள்ள நீர் புகுந்தது. இதனால், லட்சக்கணக்கானோர் உடமைகளை இழந்தனர்.

இந்த நிலையில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேணடும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. இதை தொடர்ந்து ஏரிகள், குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஆங்காங்கே பொதுப்பணித்துறை இறங்கியுள்ளது. இருப்பினும் ஆக்கிரமிப்பாளர்களால் தொடர்ந்து நீர்நிலைகளில் இருந்து மீண்டும் புதிதாக ஆக்கிரமிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக ஏராளமான புகார்கள் வந்தது. இதை தொடர்ந்து பொதுப்பணித்துறை நீர்வளப்பிரிவு முதன்மை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி அனைத்து மண்டல நீர்வளப்பிரிவு தலைமை பொறியாளர்களுக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதன்படி ஏரிகளில் ஆக்கிரமிப்பு ஏற்படுத்திய நபர்கள் மீது குற்றவியல் (கிரிமினல்)நடவடிக்கை எடுக்கும் வகையில் சம்பந்தப்பட்ட காவல்நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார் என்று பொறியாளர் ஒருவர் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறும் போது, நீர்நிலைகளை பாதுகாக்க தமிழ்நாடு ஏரிகள் பாதுகாப்பு மற்றும் ஆக்கிரமிப்பு அகற்றும் சட்டம் 2007ல் கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து, 2007ல் அதன் விதிகளும் அமலுக்கு வந்தது. இந்த சட்டத்தின் மூலம் நீர்நிலைகளை ஆக்கிரமிப்பவர்கள் மீது இந்த சட்டத்தின் கீழ் குற்றவியல் நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால், கடந்த காலங்களில் இந்த சட்டத்தை பயன்படுத்தி நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தற்போது, ஏரிகளை ஆக்கிரமிப்பவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டம் மற்றும் நில அபகரிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

Tags : lakes ,chief chief engineer , Criminal action, lakes are occupied
× RELATED சென்னையின் முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!