×

நிரந்தர பாலம் கட்டும் பணி முடங்கியது: திருமுடிவாக்கம் பகுதி அடையாறு ஆற்றில் தற்காலிக பாலம் துண்டிப்பு

பல்லாவரம்: சென்னை பல்லாவரத்தில் இருந்து திருமுடிவாக்கம் செல்லும் பிரதான சாலை வழியாக திருமுடிவாக்கம், பெரும்பதூர் உள்பட பல பகுதிகளுக்கு தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கிறது. திருநீர்மலை, திருமுடிவாக்கம் மற்றும் பழந்தண்டலம் பகுதிகளை சுற்றிலும் ஏராளமான குடியிருப்புகளில் வசிக்கின்றவர்களும் பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்கின்றவர்களும் மேற்கண்ட சாலையை பயன்படுத்துகின்றனர். இந்த சாலையில், திருமுடிவாக்கம் பகுதியில் அடையாறு ஆற்றின் குறுக்கே நெடுஞ்சாலை துறை சார்பில் பாலம் கட்டப்படுகிறது. இதனால் மக்கள் வசதிக்காக அருகில் தற்காலிக தரைப்பாலம் அமைக்கப்பட்டு அதன் வழியாக வாகனங்கள் அனுமதிக்கப்பட்டது. சமீபத்தில் பெய்த கன மழையாலும் அடையாறு ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாகவும் தற்காலிக தரைப் பாலம் நீரில் அடித்துசெல்லப்பட்டு போக்குவரத்து அடியோடு துண்டிக்கப்பட்டுவிட்டது. இதனால் பொதுமக்களும் மாணவர்களும் கடும் அவதிப்படுகின்றனர்.

இதன்காரணமாக குன்றத்தூர், தாம்பரம் வழியாக பல கி.மீ.தூரம் சுற்றி செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதால் குறித்த நேரத்தில் செல்லமுடியாமல் தவிக்கின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘’அடையாறு ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்ட தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு ஒரு மாதத்துக்கு மேலாகியும் அதனை சீரமைக்க நடவடிக்கையும் எடுக்கவில்லை. குழந்தைகளை பள்ளிகளுக்கு அழைத்துச்செல்ல மிகவும் சிரமமாக உள்ளது. ஆம்புலன்ஸ், தீயணைப்பு வண்டிகளும் வர முடியவில்லை. சாலை துண்டிக்கப்பட்டுள்ளது குறிக்கும் வகையில் நெடுஞ்சாலை எச்சரிக்கை பலகை வைக்கவில்லை. இதனால் வெளியூர்களில் இருந்துவரும் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, அடையாறு ஆற்றுப்பால பணிகளை விரைந்து முடிக்கவேண்டும்’ என்றனர்.

Tags : bridge ,Dismantling ,river , Permanent Bridge, Tirumadiwakkam, Adiyar
× RELATED ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை ஒருவழிப்பாதையாக மாற்றம்..!!