×

சூரிய கிரகணத்தை முன்னிட்டு கோயில்களில் நடையடைப்பு

மதுரை/ராமேஸ்வரம்: சூரிய கிரகணத்தையொட்டி மதுரை, ராமேஸ்வரம், பழநி, திருவில்லிபுத்தூர் உட்பட தென் மாவட்ட முக்கிய கோயில்களில் இன்று காலை நடையடைக்கப்பட்டது. ராமேஸ்வரத்தில் இன்று அதிகாலை அதிகாலை 3 மணிக்கு ராமநாதசுவாமி கோயில் நடை திறந்து 3.30 மணி முதல் 4 மணி வரை ஸ்படிகலிங்க பூஜை நடைபெற்றது. காலை 7 மணி வரை பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து சூரிய கிரகணத்தை முன்னிட்டு  கோயில் நடை அடைக்கப்பட்டது. 8 மணிக்கு மேல் கோயிலில் இருந்து சுவாமி அக்னிதீர்த்த கடற்கரைக்கு எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெற்றது.  காலை 8.10 மணிக்கு கிரகணம் துவங்கியது. காலை 9.31 மணியில் இருந்து 9.34 மணி வரை 3 நிமிடம் வானில் சூரியன் சிவப்பு வளையமாக காட்சியளித்தது.  ராமேஸ்வரம் அக்னிதீர்த்த கடற்கரை, தனுஷ்கோடி கடற்கரை பகுதிகளில் இருந்து பொதுமக்கள், பள்ளி மாணவர்கள், சுற்றுலா பயணிகள் கண்களில் பிரத்யேக சோலார் பில்டர் கண்ணாடி அணிந்து கிரகணத்தை ஆர்வத்துடன் பார்த்தனர். பகல் 12 மணிக்கு மேல் மீண்டும் கோயில் நடை திறக்கப்பட்டு கிரகண சாந்தி பூஜை நடைபெற்றது. பின் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்பாள் சன்னதிகள் உட்பட அனைத்து சன்னதிகளிலும் வழக்கமான பூஜை, அபிஷேக ஆராதனை நடந்தன. கிரகணத்தையொட்டி அக்னிதீர்த்த கடலில் நீராடிய பக்தர்கள் பகல் 12 மணிக்கு மேல் கோயிலுக்குள் தீர்த்தமாடி சுவாமி, அம்பாளை தரிசித்தனர்.

மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் நேற்றிரவு  ராக்காலத்தில் திருவனந்தல், விளா பூஜை, காலசந்தி பூஜை நடத்தப்பட்டு, நடை சாத்தப்பட்டது. சூரிய கிரகணம் முடிந்த பின்னர் இன்று மதியம் 12 மணிக்கு நடை திறக்கப்பட்டு திருக்கால சந்தி, உச்சி கால பூஜைகள் நடந்தன.  பின்னர் நடை சாத்தப்பட்டு, மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, பக்தர்கள் வழக்கம்போல் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இதுபோன்று மதுரையில் தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயில், கூடலழகர் பெருமாள் கோயில், தல்லாகுளம் பெருமாள் கோயில் உள்ளிட்ட முக்கிய கோயில்கள் அனைத்திலும் கிரகணத்தின் போது நடை சாத்தப்பட்டது. மேலும் பழநி பாலதண்டாயுதபாணி கோயில், திருஆவினன்குடி கோயில், திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் உள்ளிட்ட தென் மாவட்டங்களின் பிரசித்தி பெற்ற கோயில்களிலும் கிரகணத்தை முன்னிட்டு இன்று காலை நடையடைக்கப்பட்டிருந்தது. 


Tags : temples , Solar eclipses, temples and walks
× RELATED பெரம்பலூரில் பெருமாள், சிவன் கோயில்கள் உண்டியல் திறப்பு