×

மேல்மலையனூரில் அமாவாசை வழிபாடு: அங்காளம்மன் ஊஞ்சல் உற்சவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

மேல்மலையனூர்: விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோயிலில் ஊஞ்சல் உற்சவம் மாதந்தோறும் நள்ளிரவில் நடைபெறுவது வழக்கம்.  நேற்று அமாவாசையை முன்னிட்டு மூலவர் அங்காளம்மனுக்கு அதிகாலையிலேயே பன்னீர், சந்தனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. அலங்கரிக்கப்பட்ட அங்காளம்மன் நள்ளிரவு 11.30 மணியளவில் வடக்கு வாயில் வழியாக ஊஞ்சல் மேடையில் அங்காளம்மனை அமரவைத்து பூசாரிகள் தாலாட்டு பாடல்கள் பாடினர்.  ஊஞ்சல் உற்சவத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நள்ளிரவு இருளில் கையில் தீபம் ஏந்தி வெளிச்சத்தில் அங்காளம்மா தாயே அருள் புரிவாயே என மனமுருகி வழிபட்டனர்.

இந்தாண்டின் கடைசி மாத ஊஞ்சல் உற்சவத்தில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக ஊஞ்சல் மேடை முழுவதும் எலுமிச்சை பழம் கோர்த்த மாலைகளால் அலங்கரிக்கப் பட்டிருந்தது கூடுதல் சிறப்பு.மேலும் மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோயிலில் ஊஞ்சல் உற்சவ ஏற்பாடுகளை இந்து சமய  அறநிலையத் துறை திருக்கோயில் உதவி ஆணையர் ராமு, மேலாளர் மணி, மேற்பார்வையாளர் செண்பகம் மற்றும் சதிஷ், அறங்காவலர்கள் செல்வம், ஏழுமலை, ரமேஷ், கணேசன், சரவணன், மணி ஆகியோர் செய்திருந்தனர். பக்தர்களின் வசதிக்காக தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்து இயக்கப்பட்டது. பக்தர்கள் பாதுகாப்பிற்காக விழுப்புரம் சரக டிஐஜி சந்தோஷ்குமார், எஸ்பி ஜெயக்குமார், செஞ்சி டிஎஸ்பி நீதிராஜன், வளத்தி இன்ஸ்பெக்டர் சுபா, சப்-இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தீயணைப்பு துறை மற்றும் மருத்துவ முதலுதவி குழுவினர் தயார் நிலையில் இருந்தனர்.



Tags : Angamalam Swing Festival ,devotees ,Angalamman , Melamalayanur, new moon, swing, darshan
× RELATED காவேரிப்பட்டினத்தில் அங்காளம்மன்...