×

அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை: அரிசி மாவு விற்கும் ஒலிம்பிக் வீரர்...கேரள இளைஞரின் பரிதாபம்

காசர்கோடு: கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள செருவதூரைப் பூர்வீகமாகக் கொண்ட முன்னாள் ஒலிம்பிக் வீரர் இ.சுமேஷ். இவர் 2015ம் ஆண்டில் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற சிறப்பு ஒலிம்பிக் போட்டியில், இந்திய கைப்பந்து அணியின் தலைவராக செயல்பட்டார். ஆனால், அவர் தற்போது  தனது வாழ்வாதாரத்திற்காக அரிசி மாவு விற்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். சுமேஷ் தலைமையிலான கைப்பந்து அணி ஒலிம்பிக் போட்டியின் போது, ஜப்பானை தோற்கடித்து வெண்கலப் பதக்கம் வென்றது.

இவரது தலைமையிலான இந்திய அணி நாடு திரும்பியதும் பலரும் பாராட்டி வரவேற்பு கொடுத்தனர். கேரளாவில் அணிக்கு பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது. அணியில் உள்ள ஒவ்வொரு உறுப்பினருக்கும் வேலை வழங்கப்படும் என்றும், மாநில அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை ரூ.20,000 ரொக்க வெகுமதியை அறிவித்திருந்தது. இருப்பினும், 4 ஆண்டுகளுக்குப் பிறகும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வாக்குறுதியளிக்கப்பட்ட வேலையையோ அல்லது பண வெகுமதியையோ கொடுக்க கவலைப்படவில்லை என்ற புகார் உள்ளது.

தற்போது அரிசி மாவு விற்கும் சுமேஷ், கான்ஹங்காட்டில் உள்ள சிறப்புப் பள்ளியில் மாணவராக இருந்தபோது பூ மாலைகளை விற்று படித்து வந்தார். பின்னர் சுமேஷ் சிறப்பு ஒலிம்பிக்கில் பங்கேற்றார். அன்று அவர் பூ மாலைகளைத் தயாரித்து பேருந்துகளில் விற்ற அனுபவம், இன்று அவரது வாழ்வாதாரத்துக்கு அரிசி மாவு விற்று சொந்த காலில் நிற்க உதவுகிறது. பல்வேறு மட்டங்களில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு வேலை உறுதி அளிப்பதன்  மூலம் அரசாங்கம் விளையாட்டை ஊக்குவிக்கும் ஒரு வழியாக இருக்கும். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, சுமேஷூக்கு அரசுப்பணி வழங்க இணையத்தில் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

Tags : government ,player ,Kerala ,Olympic , Government, Rice Flour, Olympic Player, Kerala
× RELATED மசோதாக்களில் கையெழுத்து போடவில்லை...