×

மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்து 17 பேர் உயிரிழந்த விவகாரம்: நீதி கிடைக்காததால் 3000 இந்துக்கள் இஸ்லாமிற்கு மாற திட்டம்

கோவை: மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து 17 பேர் உயிரிழந்ததற்கு நீதி கோரி 3000 பேர் இஸ்லாம் மதத்திற்கு மாற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையத்தில் 21 அடி உயர கருங்கல் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 17 பேர் உயிர் இழந்தனர். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கட்டிடத்தின் உரிமையாளர் சிவசுப்பிரமணியன் ஜாமீன் கோரிய மனு மீதான தீர்ப்பை  தேதி குறிப்பிடாமல் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்தது. கடந்த 3ஆம் தேதி கைது செய்யப்பட்ட சிவசுப்பிரமணியம், உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் வழங்கக் கோரி மனு தாக்கல் செய்தார்.

அதில், இது மழையால் ஏற்பட்ட விபத்து என்று சிவசுப்பிரமணியன் கோரி இருந்தார். இந்த வழக்கு நீதிபதி சேஷசாயி முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், விசாரணை ஆரம்பக்கட்ட நிலையில் உள்ளதால் ஜாமீன் தர  கூடாது..மேலும் 5 அடியாக இருந்த  சுவரை அனுமதி பெறாமல் 21 அடியாக உயர்த்தப்பட்டுள்ளது எனக் கூறி, வழக்கு ஆவணங்களை தாக்கல் செய்தார்.அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார். இந்த நிலையில் தமிழ் புலிகள் அமைப்பின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மேட்டுப்பாளையத்தில் நடைப்பெற்றது. அதில் கோவை மாவட்டத்தில் தீண்டாமை கொடுமைகள் அதிகரித்து வருவதாக குற்றம் சாட்டப்பட்டது. சுவர் இடிந்து 17 பேர் உயிரிழந்தது தொடர்பாக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வில்லை என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனை கண்டித்தே  மதம் மாறும் முடிவு எடுக்கப்பட்டதாக தமிழ் புலிகள் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.  



Tags : Hindus , Mettupalayam, loss of life, Islam, Hinduism
× RELATED குடியுரிமை திருத்தச் சட்டத்தின் கீழ்...