×

என்னை தீவிரவாதி என்று அழைத்தவர்கள் மீது வழக்கு தொடர்வது குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து வருகிறேன்: பிரக்யா சிங் தாகூர்

போபால்: தன்னை தீவிரவாதி என்று அழைத்தவர்கள் மீது வழக்கு தொடர்வது குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து வருவதாக எம்.பி. பிரக்யா சிங் தாகூர் தெரிவித்துள்ளார். சர்ச்சைக்குரிய கருத்துக்களால் அதிகம் அறியப்படும் பாஜக எம்.பி. பிரக்யா சிங் தாகூர், கடந்த சனிக்கிழமை டெல்லியில் இருந்து போபால் செல்லும் ஸ்பைஸ் ஜெட் விமானத்தில், இருக்கை மாற்றப்பட்டது தொடர்பாக பயணிகள் மற்றும் விமான சிப்பந்திகளுடன் பிரக்யா சிங் தாகூர் வாக்குவாதத்தில் ஈடுபட்டது சமூக வலைத்தளங்களில் பரவின. இந்த நிலையில், தனது சொந்த தொகுதியான போபாலில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளை சந்திக்கச் சென்ற பிரக்யா சிங் தாகூருக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன.

பத்திரிக்கை மற்றும் தொலைத்தொடர்பு துறை தொடர்பான பல்கலைக்கழகத்தை சேர்ந்த 2 மாணவிகள், போதிய வருகைப்பதிவு இல்லாததால் பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவிகள் இருவரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களை சந்திப்பதற்காக பிரக்யா சிங் தாகூர் போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு சென்றார். அப்போது, போராட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்கள்கள் திரண்டு வந்து, பிரக்யா சிங் தாகூரை பார்த்து பயங்கரவாதியே திரும்பி போ என முழக்கமிட்டனர். இதற்கு, பிரக்யா சிங் தாகூருடன் வந்த பாஜக ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பதில் கோஷங்களை எழுப்பினர். இதனால், அங்கு பதற்ற சூழல் ஏற்பட்டது.

தகவல் அறிந்ததும் விரைந்து வந்த போலீசார், நிலைமையை சீராக்கினர். இந்நிலையில் இதுகுறித்து பேசிய பிரக்யா சிங் தாகூர், தன்னை பயங்கரவாதி என்று கூறியது, சட்டத்திற்கு எதிரானது. அது அநாகரீகமானது. தேர்ந்தெடுக்கப்பட்ட பொது பிரதிநிதியை அவர்கள் துஷ்பிரயோகம் செய்துள்ளனர். எனவே, அரசியலமைப்பின்படி அவர்கள் அனைவரும் துரோகிகள். போராட்டம் நடத்திய தேசிய மாணவர் சங்கத்தை சேர்ந்தவர்களை காவல்துறையினர் கட்டுப்படுத்தவில்லை, என்று குற்றம்சாட்டியுள்ளார். இதனை தொடர்ந்து இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது வழக்கு தொடர்வது குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


Tags : experts ,Pragya Singh Tagore ,Pragya Singh Thakur: Who Am I , Pragya Singh Thakur, BJP, Bhopal, University, Terrorist
× RELATED மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு…...