×

பாதயாத்திரை பக்தர்கள் வருகை துவங்கியது

*பழநியில் ரோந்து பணி தீவிரமாகுமா?

பழநி : பழநிக்கு பாதயாத்திரை பக்தர்கள் வர துவங்கியுள்ளனர். எனவே போலீசார் ரோந்து பணியை அதிகரிக்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பழநி நகரில் கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்களில் ஒன்று தைப்பூசம். இந்த ஆண்டு, இத்திருவிழா வரும் பிப்ரவரி 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. எனினும், அரையாண்டு தேர்வு விடுமுறை துவங்கி உள்ளதால் கடந்த சில தினங்களாகவே பக்தர்கள் பாதயாத்திரையாக வர துவங்கி விட்டனர். இதனால் பழநி நகரில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

இவ்வாறு வரும் பக்தர்களிடம் வியாபராம் செய்வதற்காக அடிவார பகுதிகளில் ஏராளமான கடைகள் முளைத்துள்ளன. தமிழகம் மட்டுமின்றி ராஜஸ்தான், குஜராத் போன்ற வெளிமாநிலங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் குவிந்துள்ளனர். அதுபோல் வரும் பக்தர்களிடம் பிச்சை எடுப்பதற்காகவும் ஏராளமானோர் பழநி நகரில் முற்றுகையிட்டுள்ளனர். இந்நிலையில் தற்போது பழநி நகருக்கு வரும் பக்தர்களிடம் பிக்பாக்கெட், நகைபறிப்பு போன்ற திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்து உள்ளதாக புகார் எழுந்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக பழநி நகருக்கு வியாபாரம் செய்ய வரும் வெளிமாநில பக்தர்களை போலீசார் போட்டோ எடுத்து, முகவரிகள் வாங்கி சரிபார்த்து அவர்களின் நடவடிக்கைகளை கண்காணித்து வந்தனர். அந்த நடவடிக்கை இந்தாண்டு தற்போதுவரை மேற்கொள்ளப்பட்டதாக தெரியவில்லை. அதுபோல் லாட்ஜ்கள் மற்றும் மண்டபங்களில் தங்குபவர்களின் விபரம், நீண்ட நாட்கள் தங்கி இருப்பவர்களின் எண்ணிக்கை குறித்து ஆய்வு செய்யப்படுவதும் இல்லை. இதுபோன்ற காரணங்களால் வியாபாரிகளின் போர்வையில் ஏராளமான குற்றவாளிகள் உலா வருவதற்கு வாய்ப்புகள் அதிகளவில் உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், ஒட்டன்சத்திரம் துவங்கி பழநி வரை உள்ள தேசிய நெடுஞ்சாலையின் பல பகுதிகள் இன்னமும் இருளில் மூழ்கிய நிலையிலேயே உள்ளது. வெயிலின் காரணமாக அநேக பக்தர்களும் இரவில்தான் நடப்பது வழக்கம். பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் நடந்து வருவதற்காக திண்டுக்கல்லில் இருந்து பழநி வரை அமைக்கப்பட்ட பிரத்யேக நடைமேடையும் புதர்கள் மண்டி நடந்து செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, போலீசார் இரவு நேரங்களில் தங்களது ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டுமெனவும், மாவட்ட நிர்வாகம் அந்தந்த ஊராட்சிகள் மூலம் பக்தர்கள் நடந்து வரும் வழித்தடங்களில் மின்விளக்குகள் ஏற்படுத்தி தர வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.

Tags : influx ,pilgrims ,Devotees ,Palani , Palani, lord murugan,Dindigul,Footpath ,Police Patrol work
× RELATED உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட்டதால்...