×

திருமூர்த்தி அணையில் பாதுகாப்பு வேலி அமைக்கும் பணி மீண்டும் துவக்கம்

உடுமலை : திருமூர்த்தி அணையில், சுற்றுலா பயணிகள் பாதுகாப்புக்காக விடுபட்ட இடங்களில் பாதுகாப்பு வேலி அமைக்கும் பணி நடந்து வருகிறது.  உடுமலை அருகே உள்ள திருமூர்த்திமலைக்கு தினசரி ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்குள்ள அமணலிங்கேஸ்வரர் கோயிலில் வழிபட்டு, பஞ்சலிங்க அருவியில் குளித்து செல்கின்றனர். மேலும் திருமூர்த்தி அணை, வண்ண மீன் காட்சியகம், நீச்சல் குளம் ஆகியவற்றுக்கும் செல்கின்றனர்.

விடுமுறை தினங்கள், அமாவாசை, பவுர்ணமி தினங்களில் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். தற்போது சபரிமலை சீசன் என்பதால், ஏராளமான ஐயப்ப பக்தர்கள் திருமூர்த்திமலைக்கு வருகின்றனர்.
திருமூர்த்தி அணையின் கரைப்பகுதி புதைமணல் கொண்ட பகுதியாகும். இங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் தடை மீறி குளிக்கும் நபர்கள் அணையில் மூழ்கி பலியான சம்பவம் கடந்த காலங்களில் நடந்துள்ளது.  இதுபோன்ற சம்பவங்களை தடுக்க பொதுப்பணித்துறை சார்பில், 2 ஆண்டுக்கு முன்பு அணையில் இறங்க முடியாதபடி தடுப்பு வேலி அமைக்கப்பட்டது.

பாலாற்றங்கரையில் இருந்து பெருமாள் கோயில் வரை சுமார் 550 மீட்டர் தூரத்துக்கு ரூ.34 லட்சம் செலவில் தடுப்பு கம்பி வேலி அமைக்கப்பட்டது. இதனால் அணையில் இறங்குவோர் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. இருப்பினும், கம்பிவேலி இல்லாத பகுதியில் சிலர் செல்வது வாடிக்கையாக உள்ளது. இதையடுத்து, அணைக்கு செல்வதை முழுமையாக தடுக்கும் வகையில், பெருமாள்புதூரில் இருந்து 450 மீட்டர் நீளத்துக்கு ரூ.28 லட்சம் செலவில் கம்பி வேலி அமைக்க முடிவு செய்யப்பட்டது. தற்போது இந்த பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.

Tags : dam ,Thirumurthy ,swing ,udumalai , udumalai,Thirumoorthi Falls,Fence work
× RELATED பைக்காரா அணையின் நீர்மட்டம் சரிவு ; படகு சவாரிக்கு 100 படிகள் இறங்க வேண்டும்