×

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ள மாநிலங்களில் கேரளா முதலிடம், தமிழகம் 2ம் இடம்; 15% ஆசிரியர்கள், உறவினர்களே பாலியல் தொந்தரவு

சென்னை : குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில், பாலியல் வன்முறையில் தமிழகம் 2ம் இடத்தில் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வன்கொடுமைக்கு எதிரான  தேசிய விழிப்புணர்வு இயக்கத்தின் ஒருமை அமைப்பு வெளியிட்ட ஆய்வறிக்கையில் இந்த புள்ளி விவரம் தெரியவந்துள்ளது. நாடு முழுவதும் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் குறித்து 522 மாவட்டங்கள் மற்றும் 100 ரயில் நிலையங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகம் ஆய்வு நடத்தியது. அதில் 2018-2019ம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் 60 ஆயிரம் குழந்தைகள் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு ஆளாகி இருப்பது தெரியவந்துள்ளது.

இதில் 37%குழந்தைகள் அதாவது 22,200 குழந்தைகள் சிறு வயதிலேயே திருமணம் செய்து கொள்ளுமாறு நிர்பந்திக்கப்பட்டு இருக்கின்றனர். உடல் ரீதியாக அடித்து கொடுமைப்படுத்தியதில் 16 ஆயிரத்து 200 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். 7,800 குழந்தைகள் பாலியல் ரீதியாக துன்புறுத்துதலுக்கு ஆளாகி உள்ளனர். இதில் நாட்டிலேயே அதிகபட்சமாக கேரளாவில் தான் 1742 வழக்குகள் பதிவாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் 985 வழக்குகளும் மராட்டியத்தில் 443 வழக்குகளும் பதிவாகி இருப்பது தெரியவந்துள்ளது. ஆசிரியர்கள் மற்றும்  உறவினர்களே குழந்தைகளிடம்(15%) அதிகம் தவறாக நடந்து கொண்டிருப்பதாகவும் ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.


Tags : states ,Kerala ,teachers ,relatives ,Tamil Nadu ,children , Violence, Sex, Kerala, Tamil Nadu, Cases, Thesis, Children
× RELATED அமெரிக்காவில் கப்பல் மோதியதில் பாலம் இடிந்து விழுந்து விபத்து