×

படவேடு அருகே 14ம் நூற்றாண்டு நடுகல் கண்டெடுப்பு

கண்ணமங்கலம் : கண்ணமங்கலம் அடுத்த படவேடு அருகே 14ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் கண்டெடுக்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அடுத்த படவேட்டை சேர்ந்த வரலாற்று ஆய்வாளர்கள் அமுல்ராஜ், விஜயன் ஆகியோர் நேற்று முன்தினம் படவேடு அடுத்த வேட்டைகிரி பாளையம் கிராமத்தில் வரலாறு சார்ந்த அடையாளங்களை கள ஆய்வு செய்தனர். ஆய்வின்போது 14ம் நூற்றாண்டை சேர்ந்த நடுகல் கண்டெடுக்கப்பட்டது.
இதுகுறித்து, அமல்ராஜ் கூறுகையில், ‘படவேடு பகுதி கிபி 13ம் நூற்றாண்டு தொடங்கி கிபி 15ம் நூற்றாண்டு வரை சம்புவராயர் மன்னர்கள் மற்றும் விஜயநகர ஆட்சியாளர்களின் கீழ் இருந்து வந்தது.இந்த காலகட்டத்தில் போரில் உயிரிழந்தவர்களுக்கும், கழுமரத்தில் ஏற்றி கொல்லப்பட்ட வீரர்களுக்கும் பல நடுகற்கள் இப்பகுதியில் வைக்கப்பட்டுள்ளது.

இப்போது கண்டெடுக்கப்பட்ட நடுகல் போரில் இறந்த வீரரை எரிக்கும்போது அவரது மனைவியும் தீயில் விழுந்து மாண்டு போகும் நடுகல்(சதிகல்) ஆகும். இது கிபி 14ம் நூற்றாண்டின் பிற்காலத்தை சேர்ந்தது. இந்த நடுகல்லில் போர் வீரன் ஒருவன் கையில் நீண்ட வாளும், இடுப்புக்கு கீழே ஒரு ஆடையும், மார்பின் குறுக்கே முப்புரி நூலும் அணிந்தவாறு காணப்படுகிறது.அருகில் அவரது மனைவியின் உருவத்தில் நீண்டதொரு ஆடை அணிந்து கணவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மலர் ஒன்றை ஏந்திய நிலையில் செதுக்கப்பட்டுள்ளது. படவேடு பகுதிகளில் பல வரலாற்று அடையாளங்கள் கவனிப்பாரற்று கிடக்கிறது. இவைகளை ஒருங்கிணைத்து படவேடு பகுதியிலேயே ஒரு அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்பது இங்குள்ள மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது’ என்றார்.


Tags : Plantation ,Batavedu , Kannamangalam ,Tombstone ,padavedu,tiruvannamalai
× RELATED உப்பட்டி சுகாதார நிலையம் அருகே தெருவிளக்குகள் இல்லாததால் பாதிப்பு