×

ஜி.எஸ்.டி வசூலில் முறைகேடு: ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்திற்கு ரூ.230 கோடி அபராதம் விதித்து என்.ஏ.ஏ உத்தரவு

புதுடெல்லி: ஜி.எஸ்.டி. வசூலில் முறைகேட்டில் ஈடுபட்ட ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்துக்கு ரூ.230 கோடி அபராதம் விதித்து என்.ஏ.ஏ உத்தரவிட்டுள்ளது. கடந்த 2017 ஜூலை 1 முதல், ஜி.எஸ்.டி. எனும் சரக்கு மற்றும் சேவை வரி சட்டம், நாடு முழுவதும் அமலுக்கு வந்தது. மறைமுக வரிகளை எல்லாம் ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்ட ஜி.எஸ்.டி.யானது வரி விதிப்பு முறையில் புரட்சிகரமான முயற்சியாக கருதப்பட்டது. பல்வேறு அடுக்குகளில் பொருட்களுக்கு வரி விதிக்கப்பட்டன. மேலும், மாதம்தோறும் கூட்டப்படும் ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் ஜி.எஸ்.டி வரிவிகிதத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்படுவது வழக்கம். அப்படிக் கொண்டுவரப்படும் மாற்றங்களின் பயனை நுகர்வோருக்குக் கடத்த வேண்டியது தயாரிப்பு நிறுவனங்களின் பணியாகும்.

எனவே, எந்தப் பொருளுக்கும் ஜி.எஸ்.டி விகிதம் குறைக்கப்படும்போது அதை உடனடியாக அந்தப் பொருள்களில் பிரின்ட் செய்து, விலையைக் குறைத்து விற்பனை செய்யப்பட வேண்டும். சில நிறுவனங்கள் ஜி.எஸ்.டி விகிதத்தைக் குறைத்துக் காட்டுவதோடு, பொருளின் விலையை உயர்த்தி, ஏற்கெனவே உள்ள விலையிலேயே விற்பனை செய்வது போன்ற முறைகேட்டில் ஈடுபடுவார்கள். இன்னும் சில நிறுவனங்கள், ஜி.எஸ்.டி விகிதத்தைக் குறைக்காமல் பழைய விகிதத்திலேயே விற்பனை செய்வார்கள். ஆனால், கணக்கில் காட்டும்போது ஜி.எஸ்.டி விகிதத்தைக் குறைத்துக்காட்டுவார்கள். இப்படிச்செய்வதால் ஜி.எஸ்.டி விகிதத்தைக் குறைத்ததன் பலனை அந்த நிறுவனங்களே அனுபவித்து கூடுதல் ஆதாயம் பெறுகின்றன. அந்த வகையில், ஜி.எஸ்.டி. வரிவிகிதத்தில் கொண்டு வரப்பட்ட மாற்றங்களை நுகர்வோருக்கு கடத்தாமல், ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் 15, 2017 முதல் அந்நிறுவனத்தின் சில தயாரிப்புகளுக்கான ஜி.எஸ்.டி. வரி 28 சதவிகிதத்திலிருந்து 18 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த ஜி.எஸ்.டி விகிதக்குறைப்பின் பலனை நுகர்வோருக்குக் கடத்தாமல் மோசடி செய்ததை என்.ஏ.ஏ.(தேசிய மிகை லாப தடுப்பு ஆணையம்) அமைப்பு கண்டுபிடித்தது. இதனையடுத்து ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்துக்கு, ஜி.எஸ்.டி சட்டம் 171(3A) பிரிவின்படி ரூ.230 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த அபராத தொகையை 3 மாதங்களுக்குள் செலுத்த வேண்டும் எனவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதேபோன்ற குற்றச்சாட்டுக்காக நெஸ்லே இந்தியா நிறுவனத்துக்கு, இம்மாத துவக்கத்தில் ரூ.90 கோடி அபராதம் விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


Tags : Johnson & Johnson ,Johnson ,rap , GST, Johnson Johnson, Fines, N.A.A.
× RELATED பொது இடத்தில் தகாத வார்த்தைகளால் திட்டிய 2 பேர் கைது