×

2020-ம் ஆண்டில் சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா-எல்1 செயற்கைகோள் விண்ணில் ஏவப்படும்: இஸ்ரோ தகவல்

ஸ்ரீஹரிகோட்டா: 2020-ம் ஆண்டில் சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா-எல்1 செயற்கைகோள் விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ), ஆந்திரா மாநிலம்  ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜிஎஸ்எல்வி, பிஎஸ்எல்வி வகையிலான ராக்கெட் மூலம் செயற்கைகோளை விண்ணுக்கு அனுப்பி ஆய்வு செய்து வருகிறது. மேலும் வர்த்தக ரீதியாகவும் வெளிநாட்டு செயற்கைகோள்களையும் விண்ணில் செலுத்தி வருகிறது. அதுமட்டுமின்றி விண்ணுக்கு மனிதனை அனுப்பி ஆய்வு செய்யும் வகையில், முதல்கட்டமாக மாதிரி பொம்மையை வைத்து, எல்விஎம் - மாக்3 செயற்கைகோளை செலுத்தி கடலில் விழச்செய்தது.

இது இந்திய வரலாற்றில் மிக பெரிய சாதனையாக அமைந்துள்ளது. எதிர்காலத்தில் விண்வெளிக்கு மனிதனை அனுப்பி ஆய்வு செய்யும் திட்டத்தை துவங்கினால், நாசாவுக்கு அடுத்தப்படியாக இஸ்ரோவும் இந்த வரிசையில் இணையும். இதனிடையே 2019-ம் ஆண்டு பல்வேறு திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தி சாதனை படைத்துள்ளது. இந்த சாதனைகள் தொடரும் வகையில், 2020-ம் ஆண்டு பல்வேறு புதிய பயணங்களை செயல்படுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. 2020-ம் ஆண்டில் 10-க்கும் மேற்பட்ட செயற்கைகோள்கள் விண்ணில் ஏவப்பட உள்ளது. இந்த பட்டியலில் மேம்பட்ட தகவல் தொடர்பு செயற்கைகோள்களான ‘ஜிசாட்-1’ மற்றும் ‘ஜிசாட்-2’ ஆகியவை அடங்கும்.

கூடுதலாக, பூமியின் கண்காணிப்பு செயற்கைகோள்கள் ரீசாட்- 2 பிஆர்-2 மற்றும் கண்காணிப்புக்கான ‘மைக்ரோசாட்’ ஆகியவையும் விண்ணில் ஏவப்பட உள்ளது. 2020-ம் ஆண்டின் நடுப்பகுதியில் ஆதித்யா-எல்1 என்ற சூரியனை ஆய்வு செய்யும் செயற்கைகோள் விண்ணில் ஏவப்படுகிறது. ஆதித்யா-எல்1 திட்டம் சூரியனை ஆராய்வதற்கான இந்தியாவின் முதல் பணியாகும். இந்த செயற்கை கோளின் மொத்த எடை 400 கிலோ. பூமியில் இருந்து 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் ஒளிவட்ட பாதையில் சுற்றி வரும். அவ்வளவு தொலைவில் சுற்றி வருவதால் அது எப்போதும் சூரியனை பார்த்தபடி இருக்கும். கிரகணங்கள் சமயத்தில் கூட, அது சூரியனின் பார்வையில் இருந்து மறையாது. இந்த நிகழ்வின் போது எந்தவொரு கிரகணமும் இல்லாமல் சூரியனை துல்லியமாக ஆராய முடியும் என கண்காணிக்கப்படுகிறது.

இது இஸ்ரோவுக்கு ஒரு பெரிய வெற்றியை அளிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆதித்யா-எல் 1 செயற்கை கோளில் உள்ள கருவிகள் அனுப்பும் தகவல்கள் மூலம் சூரியனை பற்றிய ஆய்வு மேற்கொள்ளப்படும். இந்த செயற்கைகோள் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்படும். இந்த ராக்கெட் அதிநவீன எக்ஸ்எல் வகையை சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : ISRO ,Aditya-L1 , Sun, Aditya-l1 satellite, ISRO
× RELATED இந்தியாவில் வெப்ப அலையின் தாக்கம்...