×

சார்பதிவாளர்களிடம் வீடியோ கான்பரன்ஸ்மூலம் விசாரணை: பதிவுத்துறை ஐஜி முடிவு

சென்னை: கடந்தாண்டை காட்டிலும் வருவாய் குறைந்த சார்பதிவாளர் அலுவலகங்களில் மாதம் இருமுறை வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரணை நடத்த பதிவுத்துறை ஐஜி முடிவு செய்துள்ளார்.  கடந்த 2012ம் ஆண்டு முதல் புதிய வழிகாட்டி மதிப்பு அமல்படுத்தப்பட்டது. இந்த வழிகாட்டி மதிப்பு மூலம் ஆண்டுக்கு ₹20 ஆயிரம் கோடி வருவாய் ஈட்டப்படும் என்று தமிழக அரசு எதிர்பார்த்தது. ஆனால், வழிகாட்டி மதிப்பு குளறுபடியால் 8 ஆயிரம் கோடி வருவாய் ஈட்டுவதே சவாலான காரியமாக இருந்தது. இந்த நிலையில் கடந்த 2017 வழிகாட்டி மதிப்பு 30 சதவீதம் குறைக்கப்பட்டது.  இதைதொடர்ந்து பத்திரப்பதிவு அதிகரித்தது. இதனால் கடந்த 2017-18ல் 22 லட்சத்து 10 ஆயிரத்து 595 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு அதன் மூலம் 9 ஆயிரம் கோடி வருவாய் இலக்கு எட்டியது. தொடர்ந்து கடந்த 2018 பிப்ரவரி முதல் ஆன்லைன் பத்திரப்பதிவு அமலுக்கு வந்தது.

ஆரம்பத்தில் ஆன்லைன் பதிவில் பல்வேறு இடர்பாடுகள் இருந்த நிலையில், பின்னர் அவை சரி செய்யப்பட்டு, பத்திரப்பதிவு வேகப்படுத்தப்பட்டது. இதன் காரணமாக, கடந்த 2018-19ம் நிதியாண்டில் 25 லட்சத்து 73 ஆயிரத்து 478 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டு அதன் மூலம் 11071 கோடி வருவாய் எட்டியது. இந்த நிலையில் நடப்பாண்டில் 13 ஆயிரம் கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.  இந்த இலக்கை பதிவுத்துறை அடையும் என்று எதிர்பார்த்த நிலையில், கடந்த சில மாதங்களாக பத்திரப்பதிவு குறைந்து வருகிறது. ஆனால், இதற்கு, சார்பதிவாளர் அலுவலகங்களில் ஆன்லைன் பதிவில் உள்ள இடர்பாடுகளை அவ்வபோது சரி செய்யாததும், நிலுவையில் உள்ள ஆவணங்களுக்கு உரிய தீர்வு காணப்படாததும் முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் வருவாய் குறைந்த சார்பதிவாளர் அலுவலகங்களில் மாதத்துக்கு இரண்டு முறை விசாரணை நடத்த பதிவுத்துறை ஐஜி திட்டமிட்டுள்ளார். அவர்களிடம் வருமானம் குறைந்ததற்கான காரணம்,  மேலும், பதிவுப்பணியில் பிரச்சனை இருக்கிறதா என்பது தொடர்பாக அவர்களிடம் விளக்கம் கேட்கிறார். பத்திரப்பதிவு குறைந்த சார்பதிவாளர்கள் அடுத்து வரும் காலங்களில் வருவாய் பெருக்க உரிய நடவடிக்கை எடுக்கா விட்டால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.

Tags : REPRESENTATIVES ,REGISTRATION DEPARTMENT IG ,Carpativalarkal ,Registration End Ig ,video kanparansmulam hearing , Dependents, Video Conferencing, Registration Department IG
× RELATED டிக்டாக் செயலியை தடை செய்வதற்கான...