×

ஜெயலலிதாவுடன் பங்குதாரராக இருந்த கொடநாடு எஸ்டேட் உள்ளிட்ட 7 சொத்துகளுக்கும் நானே உரிமையாளர்: வருமானவரித்துறை நோட்டீசுக்கு சசிகலா பதில்

சென்னை: ஜெயலலிதாவுடன் பங்குதாரராக இருந்த கொடநாடு எஸ்டேட் உள்ளிட்ட 7 சொத்துகளுக்கும் நானே உரிமையாளர் என வருமானவரித்துறை நோட்டீசுக்கு சசிகலா பதில் அளித்துள்ளார். மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலா தற்போது சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கில் சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்கக்கோரி சசிகலா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது, வருமான வரித்துறை சார்பில் ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், மத்திய அரசு மேற்கொண்ட பண மதிப்பிழப்பு நேரத்தில் சசிகலா தொழிலதிபர்களை மிரட்டி செல்லாது என அறிவிக்கப்பட்ட நோட்டுக்களை கொடுத்து மால்கள், எஸ்டேட்டுகள், தொழில் நிறுவனங்களை வாங்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் திருச்செங்கோடு தொழில் அதிபர் குமாரசாமியிடம் செல்லாத நோட்டு 237 கோடியை கொடுத்து, ஒரு வருடம் கழித்து 6 சதவீத வட்டியுடன் தர வேண்டும் என்றும் சசிகலா தரப்பில் பேரம் பேசப்பட்டதாக கூறப்பட்டிருந்தது. இந்நிலையில், ஜெயலலிதாவுடன் பங்குதாரராக இருந்த கொடநாடு எஸ்டேட் உள்ளிட்ட 7 சொத்துகளுக்கும் நானே உரிமையாளர் என வருமானவரித்துறை நோட்டீசுக்கு சசிகலா பதிலளித்துள்ளார். அதன் விவரம் வருமாறு: பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது செல்லாத நோட்டுக்களை வைத்து சசிகலா சொத்துக்களை வாங்கி குவித்துள்ளதாக வந்த புகாரின் பேரில், சசிகலா 5 நாள் பரோலில் வந்து விட்டு சென்ற பிறகு 2017 மார்ச்சில் சசிகலாவுக்கு சொந்தமான இடங்களில் ஐடி ரெய்டு நடந்தது. இதில், பல கோடி பணம், தங்க கட்டிகள், சொத்து ஆவணங்கள், பென் டிரைவ் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. இதன் பின்பு, நவம்பர் மாதம் போயஸ் கார்டன் மற்றும் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில் சுமார் 1,900 கோடி அளவுக்கு செல்லாத நோட்டுக்களை பயன்படுத்தி சொத்துகளை வாங்கி குவித்தது, தொழிலதிபருக்கு கடன் கொடுத்தது தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது.

மேலும் போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வேதா இல்லத்தில் ஒரு புத்தகம் கைப்பற்றப்பட்டது. அதில், கொடநாடு எஸ்டேட், ராயல் வேலி புளோரிடேல் எக்ஸ்போர்ட், கிரீன் டீ எஸ்டேட், ஜெயா பப்ளிக்கேஷன்ஸ், சசி எண்டர் பிரைசஸ், ஜெய பார்ம் ஹவுஸ், ஜெஎஸ் ஹவுசிங் டெவலப்மெண்ட் ஆகிய நிறுவனங்களில் ஜெயலலிதா இறக்கும் வரை(டிச 5, 2016) சசிகலா பங்குதாரராக இருந்துள்ளார். மேலும் இந்தோ தோகா கெமிக்கல் நிறுவனம், ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ் ஆகிய நிறுவனங்களில் சசிகலா பங்குதாரராகவும், ஜாஸ் சினிமாஸில் 41.66 லட்சம், அரே லேண்ட் நிறுவனத்தில் 3.6 லட்சம், மாபிள் ஷேட் காம் நிறுவனத்தில் 7.2 லட்சம், ராம்ராஜ் அக்ரோ மில்ஸ் நிறுவனத்தில் 36,000 ஷேர் ஹோல்டராகவும் சசிகலா இருந்துள்ளார். மேலும் நமது எம்ஜிஆர், ஜெயா பப்ளிக்கேஷன்சையும் சசிகலாவே நிர்வகித்து வந்துள்ளார். சொத்துகளை வாங்கி குவித்தது, பங்குதாரராக இருப்பது பற்றியெல்லாம் விளக்கம் கேட்டு சசிகலாவுக்கு, 2017 அக்டோபர் 15ம் தேதி நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

அதில் 22ம் தேதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்படி சசிகலாவின் ஆடிட்டர் தரப்பில் இருந்து 22ம் தேதி அளிக்கப்பட்ட பதிலில், 19ம் தேதி தான் எங்களுக்கு நோட்டீஸ் வந்தது. 3 நாட்களுக்குள் பதில் அளிக்க சாத்தியமில்லை. அதுவுமில்லாமல் சசிகலா சிறையில் இருப்பதால் அவரை நேரடியாக சந்திப்பதில் சிக்கல் உள்ளது. எனவே பதில் அளிக்க 1 மாதம் அவகாசம் கேட்டிருந்தார். அதன்படி 15 நாள் அவகாசம் அளிக்கப்பட்டது. பின்னர் சசிகலா தரப்பு ஆடிட்டர் டிசம்பர் 11ம் தேதி விளக்கம் அளித்தார். அதில், டிசம்பர் 2016 வரை (ஜெயலலிதா இறப்பு வரை) மட்டுமே மேற்கண்ட நிறுவனங்களில் சசிகலா பங்குதாரராக இருந்தார். அதன்பிறகு, கொடநாடு எஸ்டேட் உள்ளிட்ட ஜெயலலிதாவுடன் பங்குதாரராக இருந்த 7 சொத்துகளுக்கும் சசிகலாவே உரிமையாளர் ஆகி உள்ளார். இது தவிர தனக்கு சொந்தமான வணிக ரீதியிலான தொழில்களையும் சசிகலா கவனித்து செய்து வருகிறார். இவ்வாறு ஆடிட்டர் அளித்த விளக்கத்தில் கூறப்பட்டுள்ளது.

இதுபற்றி எல்லாம் சிறையில் சசிகலாவை சந்தித்து வருமானவரித்துறை தரப்பில் விளக்கம் கேட்கப்பட்டது. ஆனால் செல்லாத நோட்டுக்களை பயன்படுத்தி சொத்துக்கள் வாங்கியது பற்றியும், தொழிலதிபருக்கு கடன் கொடுத்தது பற்றியும் தனக்கு எதுவும் தெரியாது என சசிகலா கூறி விட்டார். இவ்வாறு வருமானவரித்துறை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பண மதிப்பிழப்பு நேரத்தில் கோவையில் ஒரு சர்க்கரை ஆலையை சசிகலா வாங்கியதற்கு கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன் மூலம் தான் கடந்த 2016 டிசம்பர் 23ம் தேதி ₹400 கோடி கொடுக்கப்பட்டதாக வருமானவரித்துறை தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.  இந்நிலையில், கொடநாடு எஸ்டேட் உள்ளிட்ட ஜெயலலிதாவுடன் பங்குதாரராக இருந்த 7 சொத்துக்களுக்கும் நானே உரிமையாளர் என சசிகலா தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Kodanadu Estate ,owner ,properties ,partner ,Jayalalithaa ,Sasikala , Jayalalithaa, Kodanadu Estate, Income Tax Department, Notices, Sasikala
× RELATED கொலை, கொள்ளை தடயங்களை அழிக்க...