×

வராக்கடன் குறைந்தாலும் கடன் வழங்குவதில் வளர்ச்சி இல்லை

புதுடெல்லி: வங்கிகளின் வராக்கடன் 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 9.1 சதவீதமாக குறைந்துள்ளது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. அதேநேரத்தில், கடன் வழங்குவதில் வளர்ச்சி ஏற்படவில்லை. வராக்கடன் காரணமாக வங்கிகளின் நிதி நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது. கடந்த ஆண்டு மார்ச்  நிலவரப்படி, வராக்கடன் விகிதம் 11.2 சதவீதமாக இருந்தது. கடந்த மார்ச் கணக்கீட்டின்படி, வராக்கடன் 9.1 சதவீதமாக குறைந்துள்ளது. நீண்ட காலமாக வசூலிக்க முடியாத கடன்கள் தள்ளுபடி, திவால் சட்ட நடவடிக்கைகள் இதற்கு காரணம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

வராக்கடன் குறைந்ததால், வங்கிகளிடம் மூலதன இருப்பு அதிகரித்துள்ளது. அதேநேரத்தில், கடன் வழங்குவதில் வளர்ச்சி ஏற்படவில்லை. கடந்த சில மாதங்களாக வங்கிகள் கடன் வழங்குவது மந்த நிலையிலேயே இருக்கிறது. குறிப்பாக தொழிற்சாலைகளுக்கு கடன் வழங்குதல் ஒற்றை இலக்க வளர்ச்சியையே அடைந்துள்ளது என வங்கி அதிகாரிகள் கூறுகின்றனர். ரிசர்வ் வங்கி கடன் வட்டியை குறைத்தபோதும், வாடிக்கையாளர்கள் மற்றும் தொழில்துறையினர் இடையே நம்பிக்கை ஏற்படவில்லை. கடன் வழங்குவதில் வளர்ச்சி ஏற்படாததற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

* வங்கி மோசடி 74 சதவீதம் உயர்வு:  
வங்கிகளின் நடக்கும் மோசடிகள், 2017-18 நிதியாண்டுடன் ஒப்பிடுகையில், கடந்த நிதியாண்டில் 74 சதவீதம் உயர்ந்துள்ளது என ரிசர்வ் வங்கி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 2017-18 நிதியாண்டில் வங்கியில் நடந்த நிதி மோசடிகள் ரூ.41,167 கோடியாக இருந்தது. இது கடந்த நிதியாண்டில் ரூ.71,543 கோடியாக உயர்ந்து விட்டது. மோசடி சம்பவங்கள் எண்ணிக்கை 15 சதவீதம் உயர்ந்துள்ளது. 2017-18ல் 5,916 மோசடிகள், கடந்த நிதியாண்டில் 6,801 மோசடிகள் நடந்துள்ளன. இதற்கு முன்பு 2014--15ல் ரூ.19,455 கோடி மோசடி (4,639 மோசடி சம்பவங்கள்), 2015-16ல் ரூ.18,699 கோடி (4,693 மோசடி), 2016-17ல் ரூ.23,934 கோடி (5,076 மோசடி) நடந்துள்ளது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

Tags : There is no growth in lending, even though lending is low
× RELATED ஏப்-28: இன்று பெட்ரோல் ரூ.100.75, டீசல் ரூ.92.34 க்கு விற்பனை!.