×

பிலிப்பைன்சை தாக்கிய பான்போன் சூறாவளி

மனிலா: பிலிப்பைன்ஸ் நாட்டில் கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் விடுமுறையை கொண்டாடுவதற்காக மக்கள் உற்சாகமாக இருந்த நிலையில் அந்நாட்டை நேற்று முன்தினம் சூறாவளி தாக்கியது. சூறாவளி புயல் வீசத்தொடங்கியதால் நேற்று முன்தினம் இரவு முதலே மக்கள் அச்சத்தில் உறைந்தனர். பான்போன் என பெயரிடப்பட்டுள்ள இந்த சூறாவளி செவ்வாயன்று நள்ளிரவு மேலும் வலுவடைந்தது. இதனால் மணிக்கு 195 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. இதன் காரணமாக சாலையோரங்களில் இருந்த மரங்கள் வேறுடன் சாய்ந்தன. வீடுகளின் மேற்கூரைகள் காற்றில் பறந்தன. மேலும் வீடுகளில் இருந்த கண்ணாடி கதவுகள், ஜன்னல்கள் உடைந்து நொறுங்கியது. ஏராளமான வீடுகள் சேதமடைந்தன.

சூறாவளி கரையை கடந்த நிலையில் நேற்று அதிகாலை முதல் மழைப்பொழிவு அதிகரித்தது. எனவே சுமார் 25 ஆயிரம் பேர் இன்னும் துறைமுகங்களில் சிக்கி தவிக்கின்றனர். கிறிஸ்துமஸ் விழாவையொட்டி குடும்பத்தினருடன் வீடுகளுக்கு செல்ல முயன்றனர். எனினும் படகு சேவைகள் இல்லாததால் அவர்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு டின்னில் அடைக்கப்பட்ட மீன் மற்றும் நூடுல்ஸ் உணவாக வழங்கப்பட்டது. வீடுகள் சேதமடைந்தபோதிலும் மக்கள் பாதுகாப்பாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில் பிலிப்பைன்ஸ் மக்களால் அதை மகிழ்ச்சியாக கொண்டாட முடியவில்லை.

Tags : Philippines , Philippine, hitting, pothoon hurricane
× RELATED பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு பிரமோஸ் சூப்பர்சானிக் ஏவுகணை வழங்கிய இந்தியா.!