×

மகாராஷ்டிராவில் முழுமையாக விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும்: முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவிப்பு

புனே: மகாராஷ்டிராவில் விவசாய கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்று மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்தார். மகாராஷ்டிராவில் 2015 ஏப்ரல் 1ம் தேதிக்கும் 2019 மார்ச் 31ம் தேதிக்கும் இடையே விவசாயிகள் வாங்கிய ரூ.2 லட்சம் வரையிலான கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா-என்.பி.சி.-காங்கிரஸ் கூட்டணி அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது. எனினும் விவசாயிகளின் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சியான பாஜ கோரி வருகிறது.

அக்கட்சியை சேர்ந்த சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் தேவேந்திர பட்நவிஸ் இந்த கோரிக்கையை வலியுறுத்தி வருவதுடன், பேரவையில் பாஜ தான் தனிப்பெரும் கட்சி என்றும் தெரிவித்தார். இந்த நிலையில், புனேயில் உள்ள வசந்த்தாதா சுகர் இன்ஸ்டிடியூட்டின் வருடாந்திர பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இன்ஸ்டிடியூட்டின் சேர்மனும் தேசியவாத காங்கிரஸ் தலைவருமான சரத் பவார் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டார்.

கூட்டத்தில் முதல்வர் உத்தவ் தாக்கரே பேசியதாவது: விவசாயிகளுக்கு உடனடி நிவாரணம் வழங்கும் வகையில் அவர்களுடைய ரூ.2 லட்சம் வரையிலான கடன்களை தள்ளுபடி செய்துள்ளோம். ஆனால் அவர்களுடைய ஒட்டுமொத்த கடன்களும் விரைவில் ரத்து செய்யப்படும். விவசாய உற்பத்தியை பெருக்குவது எப்படி என்று சரத் பவார் எங்களுக்கு சொல்லித் தந்திருக்கிறார். அதுபோலவே சட்டப்பேரவையில் குறைவான எம்.எல்.ஏ.க்களுடன் எப்படி அரசு அமைப்பது என்பதையும் சொல்லித் தந்துள்ளார். இவ்வாறு உத்தவ் தாக்கரே பேசினார்.

Tags : Uddhav Thackeray ,Maharashtra , Maharashtra, Agriculture Credit, Discounts, Chief Minister Uddhav Thackeray, Announcement
× RELATED உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சுக்கு உத்தவ் தாக்கரே பதிலடி.!!