×

திருவேற்காடு நகராட்சியில் பொது இடங்களில் குப்பை கொட்டினால் நடவடிக்கை: ஆணையர் எச்சரிக்கை

பூந்தமல்லி: கோயில் நகரமான திருவேற்காடு நகராட்சிகு உட்பட்ட பகுதிகளில் குப்பை மற்றும் கழிவுகளை பொது இடங்களில் கொட்டி சுகாதாரக்கேடு ஏற்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என நகராட்சி ஆணையர் எச்சரித்துள்ளார்.
திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தினமும் 23 மெட்ரிக் டன் அளவுக்கு குப்பை சேகரிக்கப்படுகிறது. நகராட்சி பணியாளர்கள் வீடு வீடாக சென்று மக்கும் மற்றும் மக்காத குப்பையை பிரித்து சேகரித்து வருகின்றனர். இந்நிலையில், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நகரின் பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வு பதாகைகள், பேனர்கள் வைக்கப்பட்டு வருகிறது. மேலும், துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து நகராட்சி ஆணையர் செந்தில்குமரன் கூறுகையில், ‘திருவேற்காடு நகராட்சியை தூய்மையான நகராக மாற்றுவதற்கு நகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பொதுமக்கள் இதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். திடக்கழிவு மேலாண்மை விதிகளின் படி, குப்பையை உருவாக்குபவரே குப்பைக்கு பொறுப்பு என்பதை உணர வேண்டும். குப்பையை வீடு தேடி வரும் நகராட்சி பணியாளரிடம் வழங்க வேண்டும். கண்ட இடங்களில் குப்பையை கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், நீர்நிலைப் பகுதிகளில் குப்பை மற்றும் இறைச்சி கழிவுகளை கொட்டுபவர்கள் மீதும், தனியார் கழிவு நீர் லாரிகளில் சேகரிக்கப்படும் கழிவு நீரை நகராட்சி பகுதிகளில் கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார். நகராட்சி சுகாதார அலுவலர் மணிகண்டன், சுகாதார ஆய்வாளர் ஆல்பர்ட் அருள்ராஜ் உடன் இருந்தனர்.

Tags : municipality ,places ,Thiruvenkadu , Thiruverkadu Municipality, Public Places, Garbage, Action, Commissioner, Warning
× RELATED பொதட்டூர்பேட்டை பேரூராட்சியில் வளர்ச்சி திட்ட பணிகள் ஆய்வு