×

தீவுத்திடல் எதிரே உள்ள கூவம் கரையோர வீடுகளை அகற்ற எதிர்ப்பு: பொதுமக்கள் சாலை மறியல்

சென்னை: சென்னை தீவுத்திடல் எதிரே, கூவம் கரையோரம் உள்ள 5 ஆயிரம் குடிசை வீடுகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. சென்னை தீவுத்திடல் எதிரே, கூவம் கால்வாயை ஒட்டியுள்ள எஸ்.எம்.நகர், காந்தி நகர், இந்திரா காந்தி நகர் பகுதியில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடிசை வீடுகளில் கூலி தொழிலாளர்களின் குடும்பங்கள் வசித்து வருகின்றன. கடந்த 2015ம் ஆண்டு பெய்த கனமழையால் அடையாறு மற்றும் கூவம் ஆற்றங்கரை ஓரம் இருந்த ஏராளமான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின.

இதையடுத்து, அடையாறு மற்றும் கூவம் கரையோர வீடுகளை அகற்றி, அங்கு வசிப்பவர்களுக்கு மாற்று குடியிருப்பு வழங்க வேண்டும், என நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, கூவம் கரையோர வீடுகள் அகற்றப்பட்டு, அங்கு வசித்தவர்களுக்கு பெரும்பாக்கத்தில் குடிசை மாற்று வாரியம் சார்பில், குடியிருப்புகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், தீவுத்திடல் எதிரே கூவம் கரையோரம் குடிசை வீடுகளில் வசித்த 2,700 பேருக்கு முதல்கட்டமாக பெரும்பாக்கம் குடிசைமாற்று வாரிய குடியிருப்புகளில் வீடுகள் ஒதுக்கப்பட்டன.

வீடு ஒதுக்கீடு செய்யப்பட்ட அனைவரும் 3 மாதத்துக்குள் குடிசை வீடுகளை காலி செய்யும்படி ஏற்கெனவே சென்னை மாநகராட்சி மற்றும் குடிசைமாற்று வாரிய அதிகாரிகள் எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கினர். எனினும், அவர்கள் குடிசை வீடுகளை காலி செய்யாமல் அங்கேயே குடியிருந்து வந்தனர். அவர்களுக்கு வழங்கப்பட்ட கெடு நேற்றுடன் முடிவடைந்தது. இதற்கிடையே, பெரும்பாக்கம் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளில் தங்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடைபெற்றதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர்.

இந்நிலையில், நேற்று காலை கூவம் கரையோர வீடுகளை இடிப்பதற்கு நில அளவீடு செய்ய மாநகராட்சி அதிகாரிகள் வந்தனர். அப்போது, வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து, மெரினா கடற்கரை அமைந்துள்ள காமராஜர் சாலையில் காலை 11 மணியளவில் பெண்கள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து மாநகராட்சி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்க வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதிகாரிகளின் சமரசத்தை ஏற்று, மறியலை கைவிட்டு மக்கள் கலைந்து சென்றனர். இதனால் அங்கு ஒரு மணி நேரம் பரபரப்பு நிலவியது.

Tags : evacuation ,homes ,road ,island ,Coovam , Archipelago, Opposition, Coastal Courier
× RELATED இல்லங்களில் இனிய வேல் பூஜை