×

வட மாநிலங்களில் போராட்டம் எதிரொலி: ஈரோட்டில் ரூ.20 கோடி ரயான் துணி தேக்கம்

ஈரோடு: குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெறகோரி வடமாநிலங்களில் தொடர் போராட்டங்கள் நடந்து வருவதால், ஈரோட்டில் விசைத்தறிகளில் உற்பத்தி செய்யப்பட்ட ரூ.20 கோடி மதிப்பிலான ரயான் துணிகள் தேக்கம் அடைந்துள்ளது.  இதனால், தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.ஈரோட்டில் வீரப்பன்சத்திரம், அசோகபுரம், சூளை, மாணிக்கம்பாளையம், லக்காபுரம், சித்தோடு உள்ளிட்ட பகுதிகளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் மூலம் ரயான், காட்டன் காடா துணி உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தி  செய்யப்படும் ரயான் துணிகள் டையிங்கிற்கு உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத் உட்பட பல்வேறு வடமாநிலங்களுக்கு அனுப்பப்படும். அங்கு டையிங் செய்யப்பட்டு, பல வண்ண துணிகளாக விற்பனை செய்யப்படும்.

இந்நிலையில், வடமாநிலங்களில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டம் நடந்து வருவதால் அங்கு டையிங் தொழில் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக ஈரோட்டில் இருந்து  வடமாநிலங்களுக்கு அனுப்பப்படும் ரயான் துணிகள் முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதனால், உற்பத்தி செய்யப்பட்ட ரூ.20 கோடி மதிப்பிலான ரயான் துணிகள் தேக்கம் அடைந்துள்ளன. இதுகுறித்து ஈரோடு விசைத்தறி உரிமையாளர் சங்க நிர்வாகி கந்தவேல் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் நாள் ஒன்றுக்கு 2 கோடி மீட்டர் ரயான் துணிகள் உற்பத்தி செய்யப்படும். நூல் விலையை பொருத்தே துணி விலையும் இருக்கும்.  கடந்த சில மாதமாக ரயான் நூல் ஒரு கிலோ 152 ரூபாயாக உள்ளது. நூல் விலை ஒரே நிலையில் இருக்கும் போது, தற்போது ரயான் துணி விலை மட்டும் வீழ்ச்சியடைந்துள்ளது.

இதனால், நூல் விலைக்கும், உற்பத்திக்கு செலவுக்கும் மீட்டருக்கு ரூ.3 வரை நஷ்டம் ஏற்படுகிறது. கடந்த 3 மாதத்தில் ரூ.29 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு மீட்டர் ரயான் (கிரே) துணி ரூ.20க்கும், ரூ.34க்கு விற்கப்பட்ட மற்றொரு ரக கிரே துணி  தற்போது ரூ.25 ஆகவும் வீழ்ச்சியடைந்துள்ளது. இதற்கிடையே, குடியுரிமை சட்டம் தொடர்பாக வடமாநிலத்தில் போராட்டம் நடந்து வருவதால், ரயான் துணிகளுக்கு டையிங் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், ஈரோட்டில் உற்பத்தி செய்யப்பட்ட ரூ.20 கோடி மதிப்பிலான ரயான்  துணி குடோன்களில் தேக்கமடைந்துள்ளது.ஜிஎஸ்டி பிரச்னையை தொடர்ந்து, தற்போது வடமாநிலங்களுக்கு துணிகள் அனுப்ப முடியாமல் தேக்கம், துணி விலை வீழ்ச்சி போன்றவைகளால் நெசவாளர்கள் என்ன செய்வது என தெரியாமல் வேலை இழக்கும் அபாயத்தில் உள்ளனர்.  இவ்வாறு அவர் கூறினார்.

Tags : states ,Northern ,protest , Erode of protest in Northern states: Rs
× RELATED வடமாநிலங்களிலும் மோடி எதிர்ப்பு அலை;...