×

நெல்லை சந்திப்பில் தாறுமாறாக செல்லும் வாகனங்கள்: கடும் போக்குவரத்து நெருக்கடி

நெல்லை: நெல்லை சந்திப்பில் தாறுமாறாக வாகனங்கள் செல்வதால் பஸ்நிலையத்தை சுற்றிலும் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.78 கோடி மதிப்பீட்டில் நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இதற்காக பஸ் நிலையத்தை சுற்றிலும் உள்ள கடைகள் அகற்றப்பட்டன. பஸ் நிலையம் அமையவுள்ள பகுதியை சுற்றிலும் தகரங்களால் கூரை வேயப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் அரசு பஸ்களும், ரயில் நிலையம் செல்லும் பஸ்களும் பஸ் நிலையத்தை வலதுபுறமாக சுற்றி செல்கின்றன. நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தை சுற்றிலும் தற்போது தாறுமாறாக இயக்கப்படுவதால், எங்கிருந்து எந்த வாகனம் வருகிறது என்பதை உணர முடியாத அளவுக்கு போக்குவரத்து நெருக்கடி உள்ளது.

நெல்லை சந்திப்பில் இருந்து வெளியேறும் மதுரை சாலை தற்போது இருவழிப்பாதையாக மாற்றப்பட்டு வாகனங்கள் இருபுறமும் இயக்கப்படுகின்றன. இதில் நுழையும் வாகனங்கள் ஆளுக்கொரு திசையில் செல்வதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். குறிப்பாக பாரதியார் சிலை திருப்பம், போலீஸ் நிழற்குடை அருகே காணப்படும் மும்முனை சந்திப்பு, மதுரை சாலை மற்றும் நெல்லை பூ மார்க்ெகட்டிற்கு செல்லும் மும்முனை சந்திப்புகளில் வாகனங்கள் எங்கு செல்கின்றன என தெரியாத அளவுக்கு போக்குவரத்து நெருக்கடி காணப்படுகிறது. நெல்லை சந்திப்பில் செயல்படும் பூ மார்க்கெட்டில் இருந்து வெளியேறும் ஷேர் ஆட்டோக்கள் அடிக்கடி சாலையை அடைத்து கொண்டு நிற்கின்றன.

இதனால் வாகனங்கள் இருபுறமும் செல்வது தடைப்படுகிறது. அரசு பஸ்களும் போக்குவரத்து நெருக்கடியில் முக்கிய பங்கு வகிக்கின்றன. குறிப்பாக நெல்லை ரயில் நிலையம் சந்திப்பிற்கு அதிகமான பேருந்துகள் சென்று வருவதால், குறுகிய சாலைகளில் பஸ்களை திருப்ப முடியாமல் டிரைவர்கள் திண்டாடுகின்றனர். சில அரசு பஸ்கள் டிக்கெட் போடுவதற்காக அம்பேத்கர் சிலை அருகே நடுரோட்டில் நிற்கின்றன. அதனாலும் போக்குவரத்து நெருக்கடி அதிகமாகிறது.

மதுரை சாலையில் உடையார்பட்டியில் நடக்கும் பால வேலை, நெல்லை சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலத்திற்கு கீழ் வாகனங்கள் செல்ல இயலாத அளவுக்கு மோசமான சாலைகள் உள்ளிட்ட காரணங்களும் நெல்லை சந்திப்பில் வாகன நெருக்கடியை அதிகரித்து வருகின்றன. காலை, மாலை வேளைகளில் நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தை சுற்றிலும் வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால் போக்குவரத்து போலீசாரும் திண்டாடி வருகின்றனர். எனவே நெல்லை சந்திப்பில் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தி, நெருக்கடியை குறைக்க அனைத்து துறைகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Tags : paddy intersection ,traffic crisis , Overwhelming vehicles at paddy intersection: Heavy traffic crisis
× RELATED ஆக்கிரமிப்பு அதிகரிப்பால் போக்குவரத்து நெருக்கடி