×

ஸ்ரீரங்கம் கோயிலில் சிலைகள் மாயம் வழக்கு: சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி திடீர் ஆய்வு... சம்பந்தப்பட்டவர்களிடம் மீண்டும் விசாரணை நடத்த திட்டம்

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சிலைகள் மாயமான விவகாரம் தொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.இதில் சம்பந்தப்பட்டவர்களிடம் மீண்டும் விசாரணை நடத்தப்படும் என தெரிவித்தார்.பூலோக வைகுண்டம் என்ற சிறப்புக்குரியது ரங்கம் ரங்கநாதர் கோயில். மிகவும் பழமை வாய்ந்த இக்கோயிலில் இருந்த உற்சவர் மற்றும் மூலவர் சிலைகள் கடந்த 2012 மற்றும் 2015ம் ஆண்டில் மாயமானது. மேலும் கோயிலின் பழங்கால பொருட்கள் சேதப்படுத்தப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே ரங்கம் கோயிலில் மாயமான சிலைகள் குறித்து திருச்சியை சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் புகார் அளித்திருந்தார்.

மேலும் இது குறித்து உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த உயர்நீதி மன்றம் சிலைகள் மாயமானது குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் 6 மாத காலத்திற்குள் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கும்படி உத்தரவிட்டது.
அதன்படி, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சிலைகள் மாயமானது குறித்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கு தற்போது உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ள நிலையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், சிலைகள் மாயமான காலத்தில் பணியாற்றிய அறநிலையத்துறை அதிகாரி உள்பட 6 பேர் மீது ஐபிசி 457(2), 406, 409, மற்றும் 25(2) ஏஏடி ஆக்ட் 1972ன்படி வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இந்த வழக்கை விசாரிக்க சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர்
மாதவன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி அன்பு, ஏடிஎஸ்பி மாதவன் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட போலீசார் நேற்று மாலை ரங்கம் வந்தனர். இங்கு ஆயிரங்கால் மண்டபம், சக்கரத்தாழ்வார் சன்னதி, மூலஸ்தானம் ஆகியவற்றில் ஆய்வு செய்து
விசாரணை நடத்தினர். தொடர்ந்து ஐஜி அன்பு அளித்த பேட்டி, 2015ம் ஆண்டின் திருப்பணியின்போது ஒரு சில விவரங்கள் நடந்ததாக ரெங்கராஜன் நரசிம்மன் என்பவர் புகார் அளித்துள்ளார். உயர்நீதிமன்றம் உத்தரவுப்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் முதலில் இருந்து விசாரணை நடக்கிறது.

தேவைப்பட்டால் சம்பந்தப்பட்டவர்களை விசாரணைக்கு அழைப்போம். தொடர்ந்து விசாரணை அதிகாரியாக பொன்.மாணிக்கவேல் இருந்த நிலையில் தற்போது ஆவணங்களை ஒப்படைத்துள்ளாரா என கேட்ட போது, உச்சநீதிமன்றத்தில் விசாரணை இருக்கும்போது அதுகுறித்து பேச முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.



Tags : Srirangam Temple ,IG Sudden Inspection ,Magic: IG Sudden Inspection , Statue of Magic in Srirangam Temple: IG Sudden Inspection
× RELATED திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் சாமி...