×

திண்டிவனம் அருகே சுடுகாட்டு பாதை இல்லாததால் உடலை அடக்கம் செய்வதில் சிரமம்

திண்டிவனம் : திண்டிவனம் அருகே மாம்பாக்கத்தில் இறந்தவரின் உடலை சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்ல பாதை இல்லாததால் நெல் வயலில் இறங்கி செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.திண்டிவனம் அடுத்த வெள்ளிமேடுபேட்டை அருகே மாம்பாக்கம் கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்துக்கு ஏரி பகுதியில் சுடுகாடு அமைந்துள்ளது. ஊரிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் உள்ள சுடுகாட்டுக்கு செல்ல 40 வருடங்களாக சாலை வசதி இல்லை என கூறப்படுகிறது.

இதற்கு முன்னதாக 10 அடியில் வழி இருந்ததாகவும், தற்போது அந்த வழி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. இதனால் அப்பகுதியில் இறந்தவர்களின் உடல்களை வயல்களில் உள்ள நெற்பயிரில் இறங்கி சேற்றில் தூக்கிச்செல்லும் அவலநிலை உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் உயிரிழந்த அண்ணாமலை என்பவரின் உடலை கொண்டு சென்று அடக்கம் செய்வதற்கு வழி இல்லாமல் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர்.


அவரது உடலை அடக்கம் செய்வதற்கு வயலில் உள்ள நெற்பயிரில் இறங்கி தூக்கி சென்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், 40 வருடங்களாக சுடுகாட்டுப் பாதை இல்லாததால் இப்பகுதியில் இறப்பவர்களின் உடலை அடக்கம் செய்வது மிகுந்த சிரமமாக உள்ளது. எனவே சுடுகாட்டுப் பாதை அமைத்துத்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.




Tags : Tindivanam ,Agriculture Land , Tindivanam ,cemetry,Agriculture Land
× RELATED திண்டிவனம் அருகே 13 வயது சிறுமியிடம்...