×

சாதனை படைக்கும் விவசாயி தமிழர் வேளாண்மை என்ற பெயரில் ஒரே சாகுபடியில் இருமுறை அறுவடை

தரங்கம்பாடி : தரங்கம்பாடி அருகே தமிழர் வேளாண்மை என்ற பெயரில் ஒரே சாகுபடியில் இருமுறை அறுவடை செய்து அசத்தி வருகிறார் ஒரு விவசாயி. நாகை மாவட்டம் தரங்கம்பாடி அருகே உள்ள நரசிங்கநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி ஞானபிரகாசம். பட்டதாரியான இவர் கடந்த 40 ஆண்டுகளாக விவசாயத்தில் ஆர்வம் கொண்டு தமிழர் வேளாண்மை என்ற பெயரில் பல புதுமைகளை செய்து வருகிறார். இது குறித்து அவர் கூறியதாவது, தமிழர் வேளாண்மை என்பது பருவநிலை மீட்டு உருவாக்கம் செய்யப்படும் சாகுபடி ஆகும். நெல் என்பது செயற்கையாக கண்டுபிடிக்கப்பட்டது. அதையும் தமிழன் தான் கண்டுபிடித்தான்.

பூமியில் எந்த உயிர் இனமும் வேளாண்மை செய்வது கிடையாது. மனிதன் தான் அதை செய்கிறான். பூமியை இயக்க வைக்கவும், உயிரினங்களை காப்பாற்றவும் தண்ணீர் அவசியம். அந்த தண்ணீரை வயல்களில் தேக்கி நெல் சாகுபடி செய்யும் முறையில் தமிழன் ஈடுபட்டான். அதன் அடிப்படையில் நானும் விவசாய சாகுபடியில் ஈடுபட்டு வருகிறேன். கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்த பிறகு 40 ஆண்டுகளுக்கு முன்பே விவசாய பணியில் ஈடுபட ஆரம்பித்தேன்.
நடவு நட்டப்பின் வயல்களில் உள்ள தண்ணீரை வடிக்கட்டாமல் தேக்கி வைப்பேன். அறுவடைக்கு சில தினங்களுக்கு முன்பே தண்ணீரை வடிய வைப்பேன்.

ஓட்டடையான் நெல் சாகுபடி செய்து வருகிறேன். தண்ணீரில் கிடப்பதால் பயிர் அழுகி போவதில்லை. அதற்கு மாறாக அதிக அளவில் குறுத்துகளை விடுகிறது. ஒரு முறை நடவு நட்டு இரண்டு முறை அறுவடை செய்கிறேன். மழைநீரை வயல்களில் தேக்கி வைத்து சாகுபடி செய்வதால் தண்ணீர் தட்டுப்பாடு வராது. ஏக்கருக்கு இந்த சாகுபடியில் 25 மூட்டை நெல் கிடைக்கிறது. இந்த முறை சாகுபடியில் பூச்சிகளுக்கு மருந்து அடிக்க வேண்டாம், உரங்கள் போட வேண்டாம்.

வயல்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் வரப்புகளில் தென்னை, மா, புளி, முருங்கை உள்ளிட்ட மர வகைகளையும், நார்த்தை, எலுமிச்சை, சீதா, நாவல், இலந்தை, பலா, பனை உள்ளிட்ட பழ வகை மரங்களையும், கத்தரி, வெண்டை, சேனை, கரணை, மஞ்சள், பரங்கிக்காய், சுரக்காய், பாகல், புடல் உள்ளிட்ட காய்கறிகளையும் பயிர் செய்துள்ளேன். அவை நல்ல அளவில் விளைச்சலை கொடுக்கின்றன. இப்படி பல அடுக்கு பயிர் முறைக்கும், பெய்கின்ற மழைநீரையை முழுமையாக நிலத்தில் நிறுத்தி சாகுபடி செய்யும் முறைக்கும் தமிழர் வேளாண்மை என்று பெயரிடப்பட்டுள்ளது. இன்னும் எதிர்காலத்தில் தமிழர் வேளாண்மை மட்டும் தான் விவசாயிகளுக்கு கைகொடுக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

Tags : tharankapadi,Harvest twice,cultivation
× RELATED யானை தாக்கி விவசாயி பலி