×

ஜல்லிக்கட்டு வழக்கு இருப்பதால் நிராகரிக்கப்பட்டவருக்கு சிறை வார்டன் பணி வழங்குவது குறித்து அரசு பரிசீலிக்க உத்தரவு

மதுரை:  ஜல்லிக்கட்டு வழக்கு இருப்பதால் நிராகரிக்கப்பட்டவருக்கு சிறை வார்டன் பணி வழங்குவது குறித்து பரிசீலிக்க அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டம், தனிச்சியம் அருகே அய்யனகவுன்டன்பட்டியை சேர்ந்தவர் ராகுல் பிரசாத். இவர், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் நடத்தப்பட்ட இரண்டாம் நிலை சிறை வார்டன் பணிக்கு விண்ணப்பித்திருந்தார்.  எழுத்துத்தேர்வு மற்றும் உடல் தகுதித்தேர்வில் வெற்றி பெற்று தேர்வானவர்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளார். போலீசாரின் விசாரணையில், வாடிப்பட்டி காவல் நிலையத்தில் ஒரு குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறி கடந்த  2017ல் பணி வழங்க மறுக்கப்பட்டது. இதை எதிர்த்து, ராகுல்பிரசாத், ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்தார். இதை விசாரித்த நீதிமன்றம் பணி வழங்க பரிசீலிக்குமாறு உத்தரவிட்டது. இதை எதிர்த்து, உள்துறை செயலர், சிறைத்துறை ஏடிஜிபி மற்றும் மதுரை எஸ்பி தரப்பில் ஐகோர்ட் மதுரை கிளையில் அப்பீல் செய்யப்பட்டது.  இந்த மனுவை நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், ஆர்.தாரணி ஆகியோர் விசாரித்தனர். அரசு தரப்பில், ‘‘ராகுல் பிரசாத் மீது குற்றவழக்கு நிலுவையில் உள்ளது. அதை மறைத்துள்ளார். குற்றவழக்கு நிலுவையில் இருக்கும்போது எப்படி பணி வழங்க  முடியும்’’ என வாதிடப்பட்டது.

மனுதாரர் வக்கீல் கார்த்திகேயன் ஆஜராகி, ‘‘விண்ணப்பம் செய்த காலத்தில் அவர் மீது எந்த வழக்கும் இல்லை. அதன்பிறகு நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தான் அவர் பங்கேற்றார். இதற்காகத்தான் அவர் மீது வழக்கு பதிவு  செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு இருப்பதே அவருக்கு தெரியாது. இப்போது தான் அவரது கவனத்திற்கு தெரிய வந்துள்ளது. இந்த வழக்கிற்காக அவர் நீதிமன்ற காவலில் வைக்கப்படவில்லை. இதுபோன்ற வழக்கில் சம்பந்தப்பட்டவர்களுக்கு பணி  வழங்கலாம் என சென்னை ஐகோர்ட் முதன்மை அமர்வும் உத்தரவிட்டுள்ளது. எனவே, அவருக்கு சிறை வார்டன் பணி வழங்க வேண்டும்’’ என வாதிட்டார். இதையடுத்து நீதிபதிகள், குற்ற வழக்கு இருப்பது தனக்கு தெரியாது என்றும், தான் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்படவில்லை என்ற வாதம் மற்றும் முந்தைய தீர்ப்பு அடிப்படையில், பணி கோரும் விண்ணப்பதாரர் கோரிக்கையை அரசுத்  தரப்பில் 2 மாதத்தில் பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளனர்.



Tags : government ,prison warden , Jallikattu , prison, warden, Government, consider
× RELATED ஆன்லைன் சூதாட்டம் பற்றி...