×

கொல்கத்தாவில் மீண்டும் பேரணி மோடி, அமித்ஷா இருவரில் உண்மை பேசுவது யார்? மம்தா பானர்ஜி கேள்வி

கொல்கத்தா: குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் 4வது முறையாக நேற்று பிரமாண்ட பேரணி நடத்தினார். அப்போது பேசிய அவர், தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்து முரண்பாடான கருத்தை தெரிவிக்கும் பிரதமர் மோடி, அமித்ஷா இருவரில் யார் உண்மையை பேசுகிறார்கள் என கேள்வி எழுப்பி உள்ளார். குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. மேற்கு வங்கம், உத்தரப்பிரதேசம், டெல்லி மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் நடந்த போராட்டங்களில் வன்முறை வெடித்து போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டது. தற்போது வன்முறை சம்பவங்கள் குறைந்துள்ள போதிலும், நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அமைதியான முறையில் போராட்டங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. மேற்கு வங்க மாநிலத்தில் முதல்வர் மம்தா பானர்ஜியே போராட்டத்தை முன்னின்று நடத்தி வருகிறார்.

கடந்த வாரம் இவரது தலைமையில் தலைநகர் கொல்கத்தாவில் 3 முறை பேரணி நடத்தப்பட்டது. இந்நிலையில், நேற்று மீண்டும் மம்தா தலைமையில் கொல்கத்தாவில் பிரமாண்ட பேரணி நடைபெற்றது. பிதான் சரணியில் உள்ள சுவாமி விவேகானந்தா சிலையில் இருந்து காந்தி பவன் வரை நடந்த பேரணியில் ஆயிரக்கணக்கான திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள், பொதுமக்கள் பங்கேற்று, குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை கண்டித்து கோஷமிட்டனர். பின்னர், பேரணியில் பேசிய மம்தா, ‘‘அராஜகமான பாஜவுக்கு சட்டப்பேரவை தேர்தலில் சரியான பதிலடியை ஜார்க்கண்ட் மக்கள் தந்துள்ளனர். நாடு முழுவதும் குடிமக்கள் பதிவேட்டை (என்ஆர்சி) அமல்படுத்துவது தொடர்பாக எந்த பரிந்துரையும், ஆலோசனையும் நடைபெறவில்லை என பிரதமர் மோடி கூறுகிறார். சில நாட்களுக்கு முன்போ, பாஜ தேசிய தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித்ஷா, நாடு முழுவதும் என்ஆர்சி அமல்படுத்தப்படும் என்றார். இருவரது பேச்சும் முரண்பாடாக உள்ளன. இதில் யார் உண்மை பேசுகிறார்கள்? நாட்டை பிரிக்க பாஜ முயற்சிக்கிறது. ஆனால் அதை நம் மக்கள் நடத்த விட மாட்டார்கள்’’ என்றார்.


Tags : Modi ,Amit Shah ,Kolkata ,Kolkata Modi , Kolkata, Modi, Amit Shah, Mamta Banerjee
× RELATED பொய்யானது பாஜகவின் வாரிசு அரசியல்...