×

பீகார், டெல்லி தேர்தலிலும் பாஜவுக்கு அடுத்தடுத்து தோல்வி காத்திருக்கிறது: பிருத்விராஜ் சவான் பேட்டி

மும்பை: பீகார் மற்றும் டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலிலும் பாஜ.வுக்கு தோல்வி காத்திருக்கிறது என்று மூத்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும் மகாராஷ்டிரா முன்னாள் முதல்வருமான பிருத்விராஜ் சவான் கூறினார். பிருத்விராஜ் சவான் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது; ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜ 65க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும் என்று அக்கட்சித் தலைவர் அமித்ஷா கூறிவந்தார். ஆனால், அவர் கூறியதில் சரிபாதி இடங்கள் கூட பாஜ.வுக்கு கிடைக்கவில்லை. அடுத்த ஆண்டு நடைபெறும் பீகார் மற்றும் டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல்களில் பாஜ தோல்வியைத் தழுவும். குஜராத் மாநிலத்திலும் அக்கட்சியின் வீழ்ச்சி தொடங்கி விட்டது. அரியானா, மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தல்களில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமித்ஷா போன்று காங்கிரஸ் தலைமை தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவில்லை. அப்படியிருந்தும் இந்த மூன்று மாநிலங்களிலும் பாஜ தோல்வியை தழுவியுள்ளது. இதன் மூலம் சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் பாஜ.வுக்கு வாக்களிப்பதில்லை என்பது தெளிவாகிறது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளின் எண்ணிக்கை கணிசமான அதிகரித்து விட்டது. அம்மாநில மக்கள் தொகையில் 46 சதவீதம் பேர் வறுமைக் கோட்டுக்கு கீழே வாழ்கிறார்கள். தொழில் மற்றும் சேவை துறைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் ஜார்க்கண்ட் மாநிலத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்து விட்டது. சரிந்து வரும் பொருளாதாரம், அதிகரிக்கும் வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் விவசாய பிரச்னைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி பேசுவதேயில்லை. நாட்டு மக்கள் அவரது இந்த போக்கை கண்காணித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Tags : Baja ,Prithviraj Chavan ,Bihar ,Delhi ,election ,BJP , Bihar, Delhi election, BJP, defeat, Prithviraj Chavan
× RELATED சட்டசபை தேர்தல் முடிவுகள்;...