×

அடுத்த ஆண்டில் நாடு முழுவதும் ‘டெலி லா’ வசதி: நீதிமன்ற நடவடிக்கைகளில் மிகப்பெரிய புரட்சி

* மொபைல் மூலம் சட்ட ஆலோசனை பெற முடியும்
*  சிறப்பு செய்தி

பணமில்லா பரிவர்த்தனை, டிஜிட்டல் இந்தியா, மேக் இன் இந்தியா என்று தொடர்ந்து பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வரும் மத்திய அரசு தனது அடுத்தகட்ட அதிரடியாக மொபைல் மூலம் சட்ட ஆலோசனை வழங்கும் ‘டெலி லா’ வசதியை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது. நாடு விடுதலை அடைந்து 72 ஆண்டுகள் கடந்து விட்டது. ஆறு லட்சத்திற்கும் மேற்பட்ட கிராமங்கள் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையும், மணிப்பூர் முதல் குஜராத் கட்ச் வரையும் பரந்து விரிந்திருக்கிறது. நமது நாட்டில் மத்திய அரசின் திட்டங்களை கடை கோடி கிராமத்திற்கும் எடுத்து செல்வதில் பல முயற்சிகள் எடுத்தும், அதில் நாம் வெற்றி பெற முடியவில்லை. ஆனால் கடந்த 2015ம் ஆண்டு மத்திய அரசால் ஆரம்பிக்கப்பட்ட பொது சேவை மையம் கிட்டத்தட்ட 3.5 லட்சம் கிராமங்களுக்கு சென்றுள்ளது. அந்த பொதுசேவை மையங்களும் மினி அரசாங்கமாக செயல்பட்டு வருகின்றன. நாட்டை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கு பிரதானமான பங்கு அளிக்கிறது. இந்த பொதுசேவை மையம் தொடங்குபவர்கள் லட்சக்கணக்கானோர் சுய வேலைவாய்ப்பு பெற்றுள்ளதுடன் மேலும் 2 பேருக்கு ேவலைவாய்ப்பு அளித்துள்ளனர்.

இந்தியாவில் 700 மாவட்டங்களில் 1,220 ஒருங்கிணைப்பாளர்கள் இந்த மையங்களை கண்காணிக்கிறார்கள். இந்த மையம் நடத்துபவர்கள் கம்ப்யூட்டர் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் திறன் பெற்றவர்களாக உள்ளனர்.  அரசின் சேவை, வங்கி சேவை, பென்ஷன் திட்டங்கள், விவசாயிகளுக்கு பென்ஷன் மற்றும் பயிர் இன்சூரன்ஸ் வசதிகளை இங்கு பெற முடியும். டெலி மெடிசன்ஸ் சிஎஸ்சி மூலமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமல்படுத்தப்பட்டது. மத்திய அரசின் ஆயுஷ் துறை மூலமாக இது ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இதன்படி நாட்டில் உள்ள பிரபலமான டாக்டர்களிடம் சிஎஸ்சி மையத்தின் மூலமாக ஆலோசனை பெறலாம்.  இந்த நிலையில் மத்திய அரசு தனது அடுத்த அதிரடி நடவடிக்கையாக ‘டெலி லா’ என்ற திட்டத்தை கடந்த 2017ல் அறிமுகப்படுத்தியது.

இதன்படி நால்சா என்று அழைக்கக்கூடிய தேசிய சட்ட ஆணையம் மற்றும் சிஎஸ்சி இ-கவர்னன்ஸ் கூட்டு சேர்ந்துள்ளது. அதன்படி நீதிமன்றத்திற்கு செல்லாமல் சிஎஸ்சி மையத்திற்கு நேரில் சென்று விவரங்களை பதிவு செய்து சட்ட ஆலோசனைகளை பெறலாம். மேலும் நீதிமன்ற நடவடிக்கைகள் மற்றும் வழக்கு விவரங்களை இ-கோர்ட் வழியாக மொபைல் ஆப் மூலம் பார்த்துக்கொள்ளலாம். தற்போது இத்திட்டம் ஜம்மு காஷ்மீர், உத்தரபிரதேசம், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள 117 மாவட்டங்களில், 1800 கிராம ஊராட்சிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. சிஎஸ்சி  மையத்தில் இதுவரை 39 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் 37,588 வழக்குகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது. அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் இந்த நடைமுறையை அதிகம் பயன்படுத்தியுள்ளனர்.

இந்தியா முழுவதும் இந்த சேவை வருகிற ஏப்ரல் 1ம் தேதி முதல் விரிவுப்படுத்தப்பட உள்ளது. பட்டியல், பட்டியலின பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு இந்த சேவை இலவசமாக வழங்கப்படுகிறது. மற்றவர்களுக்கு 30 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதன்மூலம் நீதிமன்றத்தில் வழக்குகள் தேங்குவது குறைந்து விடும்.

Tags : facility ,revolution , Cashless Transaction, Digital India, Make in India, tele Law
× RELATED சென்னை ஆவடியில், மதுபோதையில் காவலரை தாக்க முயன்ற இளைஞர்