விவசாயி வீட்டு தோட்டத்தில் முட்டையிட்டு அடைகாத்த நாகப்பாம்பு

*பிடிக்கும் முயற்சியை கைவிட்ட வனத்துறையினர்

பெரம்பலூர் : பெரம்பலூர் அருகே சோமண்டாபுதூரில் விவசாயி வீட்டு தோட்டத்தில் முட்டையிட்டு நாகப்பாம்பு அடைகாத்து வந்தது. இதனால் பாம்பு பிடிக்க சென்ற வனத்துறையினர் முயற்சியை கைவிட்டு திரும்பினர். பெரம்பலூர் ஒன்றியம், கோனேரிப்பாளையம் அருகே உள்ளது சோமண் டாப்புதூர் கிராமம். இந்த ஊரை சேர்ந்த தங்கராஜ் என்பவரது வீட்டு தோட்டத்தில் நாகப்பாம்பு உலாவி வந்தது. எனவே இந்த பாம்பை பிடித்து எங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டுமென பெரம்பலூர் வனத்துறைக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இதைதொடர்ந்து பெரம்பலூர் மாவட்ட வன அலுவலர் இளங்கோவன், வனச்சரகர் சசிக்குமார் ஆகியோரது உத்தரவின்பேரில் வனவர் பாண்டியன், வன காப்பாளர் செல்வகுமாரி, வனக்காவலர் தங்கராஜ் உள்ளிட்டோர் சோமண்டாபுதூர் கிராமத்திற்கு சென்று தங்கராஜ் தோட்டத்தில் உள்ள சிறிய புதர் பகுதியில் பாம்பு இருக்கிறதா என தேடி பார்த்தனர்.அப்போது அங்கு சிறிய செடிகளுக்கும், புதர்களுக்கும் இடையே நாகப்பாம்பு ஒன்று முட்டையிட்டு அடைகாத்து வருவது தெரியவந்தது. திடீரென அங்கு மனித நடமாட்டம் தென்பட்டு அதனால் தனக்கும் தனது முட்டைகளும் ஆபத்து ஏற்படும் என நினைத்த நாகப்பாம்பு உடனே சீறியது.

முட்டைகளை காப்பதற்காக பாம்பு அதை சுற்றி அங்கும் இங்கும் அலைந்ததால் பாம்பு அடைகாத்து வந்த 4 முட்டைகளில் ஒரு முட்டை உடைந்து போனது. இதனால் எதிர்பார்த்தபடி நாகப்பாம்பு கடும் கோபத்தில் இருந்து கொண்டிருந்தது. இதை உணர்ந்த வனத்துறையினர் முட்டைகள் பொரிக்கப்பட்டு, குட்டிகள் வெளியேறி ஊர்ந்து செல்லும் வரை அப்பகுதியில் மனித நடமாட்டம் இல்லாமல் பார்த்து கொள்ளுங்கள். இதுபோன்ற நேரத்தில் நாகப்பாம்பை சீண்டுவது பேராபத்தில் முடியும் என கூறி விட்டு திரும்பினர்.

Related Stories: