×

ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் மூன்றரை அடி உயர வாலிபர் தங்கையுடன் வாக்கு சேகரிப்பு

மேட்டூர் :  மேட்டூர் அருகே ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் மூன்றரை அடி உயர வாலிபர், தங்கையுடன் சென்று தனி ஆளாக வாக்கு சேகரித்து வருகிறார். சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே கொளத்தூர் ஊராட்சி ஒன்றியம், காவேரிபுரம் ஊராட்சியில் உள்ள கத்திரிபட்டியைச் சேர்ந்தவர் மகேந்திரன்(29). கூலி தொழிலாளியான இவர், மூன்றரை அடி மட்டுமே உயரம் உடையவர். மாற்றுத்திறனாளிக்கான வேலைவாய்ப்பு வழங்கக்கோரி, அரசு அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களிடம் பலமுறை மனுக்கள் அளித்தும் பயனில்லாததால், தற்போது புகைப்படம் மற்றும் வீடியோ கவரேஜ் வேலைக்கு சென்று வருகிறார்.

இவரது சகோதரி ரேவதி(28). இவரும் 3 அடி உயரம் மட்டுமே உள்ளார்.  இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தலில் கொளத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழுவின் 1வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு, மகேந்திரன் போட்டியிடுகிறார். இந்த வார்டில் மொத்தம் 9 பேர் களத்தில் உள்ளனர். அரசியல் கட்சிகள் சார்பில் போட்டியிடுவோர் ஆட்டம், பாட்டத்துடன் பிரசாரம் செய்து வரும் நிலையில், சுயேச்சையாக போட்டியிடும் மகேந்திரன், தனது சகோதரி ரேவதியை அழைத்துக் கொண்டு ஆர்ப்பாட்டமே இன்றி தனியாளாக வாக்கு சேகரித்து வருகிறார்.

எந்தவிதமான வானங்களையும் ஓட்ட முடியாத அண்ணன்-தங்கை இருவரும், நடந்தே சென்று வீடு வீடாக ஆதரவு திரட்டுகின்றனர்.  சக போட்டியாளர்கள் வாகனங்களில் சென்று ஓட்டு கேட்கும் நிலையில், தான் நடந்தே சென்று ஓட்டு கேட்பது பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளதாக தெரிவித்தார்.  இதுகுறித்து மகேந்திரன் கூறுகையில், ‘தொழிலாளியான எனது தந்தை சுப்பிரமணியன், சொந்த மாமா மகளான எனது தாய் சின்னப்பொண்ணுவை திருமணம் செய்து கொண்டார். உறவுக்குள் திருமணம் செய்து கொண்டதன் காரணமாக, நாங்கள் உயரம் குறைவாக பிறந்து விட்டதாக கூறுகின்றனர். குடும்ப சூழல் காரணமாக பி.காம், சிஏ படிப்பை பாதியில் நிறுத்தி விட்டேன். எனது சகோதரி எஸ்எஸ்எல்சி வரை படித்து உள்ளார்.

கிராமங்களில் என்னை போல் வறுமையில் வாடும் மக்கள் நலனுக்காக போராட எண்ணி, உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுகிறேன். நான் வெற்றி பெற்றால் லஞ்சம் இல்லாத மக்கள் சேவையை செய்வேன். அரசின் நலத்திட்டங்கள் பொதுமக்களுக்கு எளிதில் கிடைக்க உதவுவேன். எனக்காக எனது தங்கையும் ஆர்வமாக ஓட்டு சேகரித்து வருகிறார். எனக்கு ஒரு வாய்ப்பு வழங்குவதாக இப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இந்த தேர்தலில் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது,’ என்றார்.

Tags : youngster ,mettur ,Forum Committee ,sister , Local body election,Union Committee Member,mettur
× RELATED மேட்டூர் அணையை திறக்க வாய்ப்பில்லை...