×

அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் பிணவறை சேதம்

*இறந்தவரின் உடலை பாதுகாப்பதில் சிக்கல்

அருப்புக்கோட்டை :  அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் உள்ள பிணவறை சேதமடைந்திருப்பதால், இறந்தவர்களின் உடலை பாதுகாப்பாக வைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அருப்புக்கோட்டை பந்தல்குடி ரோட்டில் அரசு மருத்துவமனை உள்ளது.  தேசிய தரச்சான்று பெற்ற இம்மருத்துவமனையில் அனைத்து வசதிகளும் உள்ளன.  அருப்புக்கோட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில்  சாலை விபத்தில் இறப்பவர்கள், தற்கொலை செய்து கொண்டவர்கள், விஷகடி, இடி, மின்னலுக்கு பலியானவர்கள் ஆகியோரின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக இங்கு வைப்பர்.

இந்த அறையில் குளிர்சாதன வசதியுடன், இறந்தவர்களின் 6 உடல்கள் வரை வைப்பதற்கு வசதி உள்ளது. இது தவிர பரிசோதனை அறை தனியாக உள்ளது.  இந்த கட்டிடம் கட்டி பல ஆண்டுகள் ஆகிவிட்டன. தற்போது இந்த கட்டிடம் சேதமடைந்து இடியும் நிலையில் உள்ளது.  பிணவறை உள்ளே பரிசோதனை செய்யும் மேடை இடிந்துள்ளது.  கதவு, ஜன்னல் பெயர்ந்து கிடக்கின்றன.  இறந்தவர்களின் உடல்களை வைக்கும் குளிர்சாதனப் பெட்டி பழுதாகியுள்ளது.  இதனால், இங்கு இறத்தவர்களின் உடல்களை பாதுகாப்பாக வைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

விருதுநகருக்கு பரிந்துரை


இறந்தவர்களின் உடல்களை பாதுகாக்க வசதியில்லாததால் விருதுநகர் அல்லது மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்புகின்றனர்.  இதனால் பிரேத பரிசோதனை அறிக்கை பெறுவதற்கு  இறந்தவர்களின் உறவினர்கள் அலைந்து திரிய வேண்டியுள்ளது.  நேற்று முன்தினம் கஞ்சநாயக்கன்பட்டி நான்குவழிச்சாலையில், ராமசாமிபுரத்தை சேர்ந்த ஒருவர் சாலை விபத்தில் பலியானார்.  அவரின் உடலை பிரேத பரிசோதனைக்கு இங்கு வைக்க முடியாது எனக்கூறி, விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இதனால், இறந்தவரின் உறவினர்கள் விருதுநகர் செல்ல வேண்டியுள்ளது.

 பிரேத பரிசோதனை செய்யும் வரை இரவு பகலாக காத்திருக்க வேண்டியுள்ளது. மேலும், அருப்புக்கோட்டை காவல்நிலையத்திலிருந்து தகவல் அறிக்கைகளை போலீசார் விருதுநகருக்கு கொண்டு செல்ல வேண்டியுள்ளது. பொதுமக்களுக்கும் அலைச்சல் ஏற்படுகிறது.  எனவே, அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய பிணவறை கட்ட மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்க எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : Aruppukkottai Government Hospital ,Arupukkottai Government Hospital ,mortuary , Arupukkottai ,Government Hospital,mortuary ,damaged condition
× RELATED செங்கல்பட்டு அரசு மருத்துவமனை பிணவறை அருகே ஓடும் கழிவுநீர்