×

தண்ணீர் பாட்டில் வாங்க இனி அவசியமில்லை காருக்குள் பைப் பொருத்தி தாகம் தீர்க்கும் கண்டுபிடிப்பு

*ஆயிரம் ரூபாய் செலவில்  பழநி வாலிபர் அசத்தல்

பழநி : கார் பயணத்தின்போது இனி தண்ணீரை விலைக்கு வாங்க வேண்டியதில்லை என்கிற வகையில் பழநி அருகே வாலிபர் ஒருவர் காருக்குள்ளே பைப் பொறுத்தி தண்ணீர் பிடிக்கும் புதிய கண்டுபிடிப்பை உருவாக்கி உள்ளர். திண்டுக்கல் மாவட்டம், பழநி அருகே வயலூரை சேர்ந்தவர்  ஞானப்பிரகாசம் (39). எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன், 2 பேர் பயணிக்கும் வகையில் பாராகிளைடர் தயாரித்து சாதனை படைத்தார்.


 இதன்பின்பு, 3 பேர் பயணிக்கும் வகையில் பாராகிளைடர் தயாரித்து அதில் பயணித்து காட்டி சாதனை படைத்தார். தற்போது காரில் பயணம் செய்யும்போது தண்ணீர் பாட்டில்களை தேடி அலையாமல் காரிலேயே தண்ணீர் டேங்க் உருவாக்கி புதிய கண்டுபிடிப்பை அறிமுகப்படுத்தி உள்ளார். இதுகுறித்து ஞானப்பிரகாசம் கூறியதாவது: காரில் நெடுந்தூரம் பயணம் செய்யும்போது தண்ணீர் பாட்டில்களை தேடிப்பிடித்து வாங்கவேண்டி வரும். கிடைக்கும் தண்ணீர் பாட்டில்கள் சுகாதாரமின்றி இருந்தால் அதனால் வரும் உடல் உபாதைகள் சொல்லி மாளாது.

காருக்குள் தண்ணீர் கேனை ஏற்றி சென்றால் அதில் இருந்து தண்ணீரை எடுப்பதற்குள் கார் முழுவதும் ஈரமாகும் வகையில் சிந்தி விடும் வாய்ப்புள்ளது. இப்பிரச்னையை சரிசெய்யும் வகையில் புதிய முயற்சி மேற்கொண்டு, அதில் வெற்றியும் கண்டுள்ளேன். காரின் பின்புறம் 20 லிட்டர் அளவுள்ள தண்ணீர் கேனை நிரந்தரமாக பொருத்தி விட வேண்டும். எலக்ட்ரிப் பம்பிங் மற்றும் வயரிங் மேற்கொண்டு காரின் முன்புற சீட்டின் அருகில் இருக்கும் டேஷ்போர்டில் பைப் பொருத்தப்பட்டுள்ளது.

20 நொடியில் 1 லிட்டர் தண்ணீர் பெறலாம். குளிர்ந்த நீர் வேண்டுமென்றால் அதற்கேற்ற வகையில் தெர்மோஷீட் கருவி பொருத்தப்பட்டுள்ளது. இதனால் உடனடியாக குளிர்ந்த நீர் கிடைக்கும். கார் இயங்காமல் நிறுத்தி இருந்தாலும், தண்ணீர் பெற முடியும். பேட்டரி குறைந்த அளவே செலவாகும். வீட்டில் இருந்து தண்ணீரை சுட வைத்து ஆற வைத்து கேனில் ஊற்றி விட்டால், பயணத்தின்போது வெளியூர்களில் தண்ணீர் பாட்டில்களை வாங்க வேண்டிய அவசியமிருக்காது. இறக்குமதி கார்களில்கூட இதுவரை தண்ணீருக்கான வசதி செய்யப்படவில்லை. இதனால் எனது கண்டுபிடிப்பை பதிவு செய்ய உள்ளேன். காரில் தண்ணீர் பைப் பொருத்த ஆகும் செலவு வெறும் ஆயிரம் ரூபாய் தான். குளிர்ந்த நீர் வேண்டுமென்றால் ரூ.2 ஆயிரம் செலவாகும். இதற்கு அடுத்தபடியாக அதிக தொலைவு செல்லும் வகையில் லித்தியம் பேட்டரியில் இயங்கும் பைக் கண்டுபிடிக்க  உள்ளேன்.

Tags : Youngster ,Running Water ,Palani , palani, Dindigul,Car, drinking water, Tap
× RELATED பழனி முருகன் கோவிலில் ரோப் கார் சேவை நாளை ரத்து