×

‘ரகசியம் காக்கப்பட வேண்டும்’ எனக் கூறி இந்தியர்களின் சுவிஸ் வங்கி கணக்கு விவரங்கள் தர நிதியமைச்சகம் மறுப்பு

புதுடெல்லி: சுவிட்சர்லாந்து வங்கியில் இந்தியர்கள் வைத்துள்ள கணக்கு விவரங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்த கருப்பு பணம் பற்றி தெரிவிக்க நிதியமைச்சகம் மறுத்து விட்டது. இந்தியர்கள் வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ள கருப்பு பணத்தை மீட்க மத்திய அரசு உறுதி அளித்திருந்தது. வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கருப்பு பண விவரங்களை இந்தியாவுடன் பகிர்ந்து கொள்ள பல்வேறு நாடுகளுடன் மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது. இதன்படி, சுவிட்சர்லாந்து பெடரல் வரி நிர்வாக அமைப்பான எப்டிஏ, 75 நாடுகளுக்கு வங்கி கணக்கு விவரங்களை அளித்துள்ளது. இதில் இந்தியாவும் உள்ளது. இவை அனைத்தும், கணக்கு விவரங்களை பரிமாறிக்கொள்ளும் ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளன. சமீபத்தில் மத்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்ட முதல் பட்டியலில், தற்போது நடைமுறையில் செயல்பட்டு வரும் கணக்குகள் மற்றும் 2018க்கு முன்பு மூடப்பட்ட கணக்கு விவரங்களும் இடம்பெற்றுள்ளன. அடுத்த பட்டியல் 2020 செப்டம்பரில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது கிடைத்துள்ள பட்டியலில், வழங்கப்பட்ட விவரங்கள், வெளிநாடுகளில் இருந்து வந்த கருப்பு பணம் பற்றி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரிவிக்குமாறு செய்தி நிறுவனம் சார்பில் நிதியமைச்சகத்தில் விண்ணப்பிக்கப்பட்டது. இதற்கு பதில் அளிக்க நிதியமைச்சகம் மறுத்து விட்டது. ‘சில வரி ஒப்பந்தங்களின்படி மேற்கண்ட விவரங்கள், ‘ரகசியம் காக்கப்பட வேண்டும்’ என்ற அடிப்படையில் பெறப்பட்டுள்ளன. ஆர்டிஐ விதி பிரிவுகள் 8 (1) (ஏ) மற்றும் 8 (1) (எப்)-ன்படி, வரி தொடர்பாக வெளிநாடுகளில் இருந்து பெறப்பட்ட தகவல்களை பகிர முடியாது’ என தெரிவித்துள்ளது.
கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், பொருளாதார ஆராய்ச்சி அமைப்பை சேர்ந்த தேசிய கவுன்சில் அமைக்கப்பட்டது. இந்த அமைப்பு மேற்கொண்ட ஆய்வில், 1980ம் ஆண்டில் இருந்து 2010ம் ஆண்டு வரை 38,400 கோடி டாலர் முதல் 49,000 கோடி டாலர் வரையிலான இந்தியர்களின் கருப்பு பணம் பதுக்கி வைக்கப்பட்டிருக்கலாம் என மதிப்பீடு செய்தது.

இதுபோல், நிதி நிர்வாகத்துக்கான தேசிய இன்டிடியூட் கணிப்புப்படி, 1990-2008 ஆண்டுகளில் இந்தியர்களின் கருப்பு பணம் 9,41,837 கோடி வெளிநாட்டில் உள்ளதாக கருதப்படுகிறது. கணக்கில் வராத வருமானமாக கணக்கிடப்படும் மொத்த தொகையில் இருந்து, சராசரியாக 10 சதவீதம் இந்தியாவிற்கு வெளியே கொண்டு செல்லப்படுவதாக கணக்கிடப்பட்டுள்ளது. மற்றொரு ஆய்வின்படி, கணக்கில் வராத தொகையின் மதிப்பு, ஜிடிபியில் இருந்து 0.2 சதவீதம் முதல் 7.4 சதவீதமாக கணக்கிடப்பட்டுள்ளது. நாடாளுமன்ற நிலைக்குழு, கடந்த மார்ச் மாதத்தில் நாடாளுமன்றத்தில் இதை சமர்ப்பித்தது குறிப்பிடத்தக்கது.

Tags : Swiss ,Indians , Swiz bank account ,Indians claiming, secret
× RELATED சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் இருந்து 2...