×

கூவம் நதிக்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு பெரும்பாக்கத்தில் வீடு ஒதுக்குவதில் மோசடி : பொதுமக்கள் பரபரப்பு குற்றச்சாட்டு

சென்னை: சென்னையில் கூவம் நதிக்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு பெரும்பாக்கத்தில் வீடு ஒதுக்குவதில் மோசடி நடந்துள்ளதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழக பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் கூவம், அடையாறு, கொசஸ்தலையாறு, ஆரணியாறு ஆற்றுப்படுகைகள் உள்ளன. இவற்றின் அருகே, 1 லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த நிலையில் கடந்த 2015ம் ஆண்டு சென்னையில் பெருவெள்ளம் ஏற்பட்ட போது, ஆற்றுப்படுகைகள் அருகே இருந்த ஏராளமான வீடுகள் நீரில் மூழ்கின. இதையடுத்து, அங்கு வசித்து வருபவர்களுக்கு, அரசு சார்பில் மாற்று குடியிருப்பு ஒதுக்கீடு செய்து, அதன்பிறகு அங்கிருந்து அவர்களை வெளியேற்ற வேண்டும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை தொடர்ந்து கூவம், அடையாறு உள்ளிட்ட ஆற்றுப் படுகைகளையொட்டி வசிக்கும் குடும்பங்களை கணக்கெடுக்கும் பணியில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். பின்னர், பல இடங்களில் கூவம் கரையோர பகுதி மக்களை அங்கிருந்து அகற்றி, அவர்களுக்கு பெரும்பாக்கத்தில் மாற்று குடியிருப்பு ஒதுக்கப்பட்டது. ஆனால், இதில் கூவம் கரையோர பகுதி மக்கள் மட்டுமின்றி, ஆளும்கட்சி நிர்வாகிகள் குறிப்பிட்ட பலருக்கு முறைகேடாக வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  

ஆளும்கட்சி பிரமுகர்கள் குறிப்பிடும் நபர்களுக்கு, கூவம் நதிக்கரையோரம் வசிக்கும் மக்கள் போல் போலியாக பெயர், முகவரி சான்று தயார் செய்து, ஒரு வீட்டுக்கு ரூ.1 லட்சம் முதல் ரூ1.50 லட்சம் வரை லஞ்சம் பெற்றுக்கொண்டு ஆயிரக்கணக்கானோருக்கு வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக, சிந்தாதிரிப்பேட்டை அம்மா நகர், நாவலர் நெடுஞ்செழியன் நகர், பல்லவன் நகர், சத்தியவாணி நகர் பகுதியில் வசித்த குடும்பங்கள் 4,880 குடும்பங்களுக்கு வீடு ஒதுக்கீடு செய்வதாக பொதுப்பணித்துறை கூறி வருகிறது. ஆனால், உண்மையில், அந்த பகுதியில் வசிக்கும் 2095 குடும்பங்களுக்கு மட்டுமே வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அம்மா நகரில் 225, நாவலர் நெடுஞ்செழியன் நகர் 625, பல்லவன் நகர் 360, சத்தியவானி முத்து நகர் 885 என மொத்தம் 2095 குடும்பங்களுக்கு மட்டுமே வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள நபர்களுக்கு சட்ட விரோதமாக லட்சக்கணக்கில் பணம் பெற்று கொண்டு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, என அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து கூவம் நதிக்கரையோரம் வசிக்கும் மக்கள் கூறியதாவது: சென்னையின் பல்வேறு பகுதிகளில் வசித்து வந்த மக்களை கூவம் கரையோரம் வசித்ததாக கூறி கணக்கு காட்டி அவர்களுக்கு வீடு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், உண்மையிலேயே இங்கு குடியிருக்கும் பலருக்கு தற்போது வரை வீடு ஒதுக்கப்படவில்லை. இது தொடர்பாக குடிசை மாற்று வாரியத்திடம் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், அவர்கள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் கொடுக்கும் பட்டியல் அடிப்படையில் தான் வீடு ஒதுக்குவோம் என்று கூறி விட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக அவர்கள் விசாரணை கூட நடத்தவில்லை. இதை பயன்படுத்தி கொண்டு லட்சக்கணக்கில் பணம் வாங்கிக்கொண்டு தகுதியில்லாத நபர்களுக்கு வீடு ஒதுக்கி தரப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கூவம் நதிக்கரையோரம் அருகே வாழும் மக்களுக்கு அரசு ஒதுக்கீடு செய்யும் இடத்தை முறையாக வழங்க ஆவணம் செய்ய வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : banks ,Koovam River ,river , Large number of people living,e banks, river Koovam
× RELATED மங்களகோம்பை செல்லும் சாலையில் புலியூத்து ஆற்றின் குறுக்கே பாலம் தேவை