×

திருச்சுழி அருகே அம்மன்பட்டியில் 300 பேருக்கு இரட்டை வாக்குரிமை: ஆளுங்கட்சி ஆதரவாளர்கள் என்பதால் நீக்க மறுப்பதாக கலெக்டரிடம் புகார்

விருதுநகர்: திருச்சுழி அருகே, அம்மன்பட்டி கிராமத்தில் 300 பேருக்கு இரட்டை வாக்குரிமை இருப்பதாக கூறி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் புகார் மனு அளித்துள்ளனர். அவை ஆளுங்கட்சிக்கு ஆதரவான வாக்குகள் என்பதால், அதிகாரிகள் நீக்க மறுப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர். விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே உள்ள அம்மன்பட்டியைச் சேர்ந்த மருதுபாண்டி தலைமையில் சிலர், விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு அளித்தனர். பின்னர் மருதுபாண்டி கூறுகையில், ‘‘ராமநாதபுரம் மாவட்டம், கமுதி தாலுகா மண்டலமாணிக்கம் ஊராட்சியில் உள்ள முத்துப்பட்டி கிராமத்தையும், விருதுநகர் மாவட்டம், நரிக்குடி ஊராட்சி ஒன்றியம், வேலானுரணி ஊராட்சியில் உள்ள அம்மன்பட்டி கிராமத்தையும் ஒரே சாலைதான் பிரிக்கிறது. முத்துப்பட்டியைச் சேர்ந்த 300 பேருக்கு அம்மன்பட்டியிலும், முத்துப்பட்டியிலும் ஓட்டு உள்ளது. இதுகுறித்து விஏஓ, வாக்குச்சாவடி பூத் அலுவலர், திருச்சுழி தாசில்தார் ஆகியோருக்கு எழுத்துப்பூர்வமான மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன.

ஆனால், நடவடிக்கை இல்லை. இரட்டை வாக்குரிமை வாக்குகளை நீக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும்’’ என்றார். அம்மன்பட்டி பாண்டி கூறுகையில், ‘‘ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பட்டியில் நிரந்தரமாக வசிப்போருக்கு விருதுநகர் மாவட்டம் அம்மன்பட்டியிலும் வாக்குரிமை உள்ளது. இரண்டு இடங்களிலும் ஓட்டு போட்டு வருகின்றனர். அம்மன்பட்டியில் 700 வாக்காளர்கள் வசிக்கும் நிலையில், வாக்காளர் பட்டியலில் 1,150 ஓட்டுகள் உள்ளன. ஆளுங்கட்சிக்கு சாதகமான வாக்குகள் என்பதால் அதிகாரிகள் நீக்க மறுக்கின்றனர். இந்த ஒருமுறை வாக்களிக்கட்டும் அடுத்த முறை நீக்கலாம் என கூறுகின்றனர். இரட்டை வாக்குரிமை உடையவர்களின் பெயர் பட்டியலை மாநில தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி உள்ளோம். தேர்தல் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீதிமன்றத்தை அணுகுவோம்’’ என தெரிவித்தார்.

Tags : voting ,Ammanpatti ,Trichy 300 ,Tiruchi ,Collector , Tiruchuzhi, Ammanpatti village, double vote
× RELATED கேரளாவில் பா.ஜ.க.வுக்கு வாக்களிக்க ஒரு...