×

தொடர்ந்து 120 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் 41 நாளுக்கு பின் சரிந்தது

மேட்டூர்: டெல்டா மாவட்டங்களில் பாசனத்திற்கான தண்ணீர் தேவை அதிகரித்துள்ளதால், மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 12 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, அணையின் நீர்மட்டம்  41 நாட்களுக்கு பின் 119.74 அடியாக சரிந்தது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து சரிந்துள்ளது. அணைக்கான நீர்வரத்து கடந்த 2 நாட்களாக 4,100 கனஅடியாக இருந்தது. இதனிடையே, டெல்டா மாவட்டங்களில் மழை பெய்யாததால், பாசனத்திற்கான நீர் தேவை அதிகரித்தது. இதனையடுத்து, மேட்டூர் அணையில் இருந்து  திறக்கப்படும் நீரின் அளவு நேற்று முன்தினம் இரவு முதல், விநாடிக்கு 12 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு விநாடிக்கு 400 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது.

நடப்பாண்டில் கடந்த மாதம் 11ம் தேதி, அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 120 அடியை 4வது முறையாக எட்டியது. அன்று முதல் தொடர்ந்து 41 நாட்களாக, 120 அடிக்கு குறையாமல் இருந்து வந்த நிலையில், தண்ணீர் திறப்பு அதிகரிப்பால் நேற்று காலை நீர்மட்டம் 119.74 அடியாக சரிந்தது. நீர் இருப்பு 93.05 டிஎம்சியாக உள்ளது.  அதேபோல், ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து இரண்டாவது நாளாக நேற்றும், விநாடிக்கு 4300 கனஅடியாக நீடித்தது. ஒகேனக்கல்லில் பரிசல் இயக்கத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், அருவிகளில் குளிப்பதற்கு விதிக்கப்பட்ட தடை நீடிக்கிறது.


Tags : Mettur Dam ,Mettur Dam Water Level , Mettur Dam ,Water Level
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 90 கனஅடி