×

5 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

சென்னை: தென் தமிழகத்தில் நிலவும் வளி மண்டல மேல் அடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும். இதையடுத்து, வட கிழக்கு பருவமழை இந்த மாத இறுதி வரை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது. அதற்கு பிறகு தமிழகத்தில் பெய்யத் தொடங்கிய மழை காரணமாக இயல்பாக பெய்ய வேண்டிய 44 செமீ அளவைத் தாண்டி தமிழகத்தில் மழை பெய்துள்ளது. இருப்பினும் சென்னை, வேலூர், புதுச்சேரி ஆகிய பகுதிகளில் இயல்பைவிட குறைவாக மழை பெய்துள்ளது. தமிழகம் முழுவதும் பார்த்தால் 3 சதவீதம் குறைவாக மழை பெய்துள்ளது. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக வறண்ட வானிலை நீடித்து வருகிறது.

வெப்ப சலனம் காரணமாக ஒரு சில இடங்களில் மட்டும் லேசான மழை பெய்துள்ளது. இந்நிலையில், தென் தமிழகத்தில் வளி மண்டல மேல் அடுக்கில் நிலவும் காற்று சுழற்சியின் காரணமாக கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும். இது தவிர தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். இதையடுத்து, குமரிக் கடல் பகுதியில் மணிக்கு 45 கிமீ முதல் 55 கிமீ வேகம் வரை காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

Tags : districts ,department , Heavy Rain, Meteorological Center
× RELATED தமிழகத்தில் உள்ள 15 மாவட்டங்களில் இரவு 7...