×

குடியுரிமை திருத்த சட்டம் என்ற பெயரில் இந்திய அரசியல் சட்டத்தை சிதைப்பதா? மத்திய அரசுக்கு எதிராக தலைவர்கள் ஆவேச பேட்டி

சென்னை: குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறும் வரை போராட்டம் தொடரும் என்றும் திருத்தம் என்ற பெயரில் அரசியல் சட்டத்தை சிதைப்பதா என்றும் பேரணியில் பங்கேற்ற தலைவர்கள் ஆவேசமாக பேட்டியளித்தனர். குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பேரணி நேற்று நடந்தது. இதில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் அமைப்புகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். பேரணியில் தலைவர்கள் அளித்த பேட்டி:  தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: இந்து மதத்துக்கோ, முஸ்லிம் மதத்துக்கோ அல்லது இந்துக்களுக்கோ, முஸ்லிம்களுக்கோ எதிரான பிரச்னை இல்லை. புனிதமான அரசியல் சட்டத்துக்கு எதிரான பிரச்னை. அரசியல் சட்டத்தை ஆர்எஸ்எஸ் சிதைக்கிறது. எனவே தன்னுடைய முகமூடியான பாஜ மூலம் ஆர்எஸ்எஸ் அதை செய்கிறது. அதை எங்களுடைய மதச்சார்பற்ற கூட்டணியும் கடுமையாக எதிர்க்கிறோம். அதன் விளைவாகத்தான் இவ்வளவு பெரிய பேரணி நடக்கிறது. இந்த பிரச்னை அரசியல் கட்சிகளிடம் இருந்து, மாணவர்கள், பொதுமக்களிடம் சென்றுவிட்டது.  

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: கடந்த காலங்களில் போராட்டம் நடத்தும்போது எத்தகைய உணர்ச்சி இருந்ததோ, அந்த உணர்ச்சியோடு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த பேரணி வெற்றி பெற்றிருக்கிறது. குடியுரிமை திருத்த சட்டத்தையும், அவர்கள் உத்தேசித்திருக்கின்ற தேசிய மக்கள் பதிவேட்டையும் எதிர்த்து ஒட்டுமொத்த இந்தியாவே சீறி எழுகிறது. தமிழகம் அதற்கு வழிகாட்டும் வகையில், நாடாளுமன்ற தேர்தல் முடிவை போன்று, லட்சக்கணக்கானவர்கள் பங்கேற்ற இந்த போராட்டம் கட்டுக்கோப்போடு, மத்திய அரசுக்கு குலை நடுங்க வைத்திருக்கும். அவர்கள் நிச்சயமாக குளவி கூட்டில் கைவைத்துவிட்டோம், முட்டாள் தனமான முடிவு எடுத்துவிட்டோம் என்று நினைக்கும் காலத்தை இது உணர்த்துகிறது. இந்த கூட்டத்தின் தாக்கம் டெல்லியில் ஒலித்து மோடியின் அராஜக சட்டத்தை நீக்கும். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன்:மத்திய அரசு திரும்ப பெறுகின்ற வரையில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டம் நாடு முழுவதும் தொடரும். தமிழகத்திலும் தொடரும். அடக்கு முறையின் மூலமாக எந்தவொரு பிரச்னைக்கும் தீர்வு காண முடியாது.

மோடி அரசு கைது, துப்பாக்கி சூட்டின் மூலமாக போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்துவிடலாம் என்று கருதுவது பகல் கனவு. அனைத்து அடக்குமுறைகளையும் எதிர்கொள்ள மக்கள் தயாராக இருக்கிறார்கள். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொகிதீன்: குடியுரிமை திருத்த சட்டத்தை போன்று, தேசிய மக்கள் பதிவேடு சட்டத்தையும் கொண்டு வருவோம் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார். அதனால் நாட்டில் உள்ள ஜனநாயகத்தை நம்பும் மக்கள், சமய சார்பற்ற கொள்கைகளை நம்புபவர்கள் இந்திய அரசியல் சாசனத்தில் மத அடிப்படையிலான எந்த முடிவும் செய்யக்கூடாது என்ற நம்பிக்கை உடையவர்கள் இந்த சட்டத்தை எதிர்க்கிறார்கள்.  விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்: குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக இன்னும் போராட்டம் தீவிரம் அடையவேண்டும் என்பதுதான் நரேந்திர மோடி அரசின் நோக்கம்.  இந்திய சமூகத்தை முஸ்லிம்கள், முஸ்லிம் அல்லாதவர்கள் என இரண்டாக பிளவுபடுத்தவேண்டும் என்பதுதான் அவர்களுடைய அடிப்படை நோக்கம். இதனை பாஜவுக்கு ஆதரவாக சில பேரணிகள் நடத்துவதன் மூலம் புரிந்துகொள்ளமுடிகிறது.

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா: குடியுரிமை திருத்த சட்டம் அனைத்து இந்தியர்களுக்கும் எதிரான சட்டம். மக்கள் விரோத சட்டத்துக்கு எதிரான எங்களுடைய போராட்டம் வலுக்கும். நிச்சயமாக மத்திய அரசு பணியக்கூடிய காலம் வெகு தூரம் இல்லை. மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி :அடுத்தகட்டமாக ஒத்துழையாமை போராட்டத்தையும், சட்ட மறுப்பு போராட்டத்தையும் முன்னெடுப்போம்.  தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன்: ஈழத்தமிழர்களிடையே கருத்தை கேட்டு, அவர்கள் விரும்புகின்ற வகையிலும் தமிழகத்தில் வாழ்வதற்கும், அவர்கள் விருப்பப்பட்டால் தமிழ் ஈழத்தில் சென்று வாழ்வதற்கும் வாய்ப்பை உருவாக்கி தரும் ஒரு சட்டம் வேண்டும். ஈழத்தமிழர்களின் கருத்தை கேட்காமல், அவர்களை ஏற்க மறுப்பது கண்டிக்கத்தக்கது.  

எஸ்டிபிஐ கட்சி தலைவர் நெல்லை முபாராக்: தமிழகம் தொடர்ந்து சமூக நீதி கோட்பாட்டிற்கும் அரசியலமைப்பு சட்டத்திற்கும் ஆதரவாக இயங்கும் என்பதை இந்த பேரணி உலகத்துக்கு சொல்லி இருக்கிறது. அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக முஸ்லிம்களையும், ஈழத்தமிழர்களையும் விலக்கி வைக்கின்ற குடியுரிமை திருத்த சட்டம் வாபஸ் பெறப்பட்டே தீர வேண்டும். இந்த குடியுரிமை சட்டத்தை ஒருபோதும் மக்கள் அங்கீகரிக்க மாட்டார்கள்.



Tags : demise ,leaders ,Indian ,government , Citizenship Amendment Act, Indian Political Law, Federal Government
× RELATED நரேந்திர மோடியை பிரதமராக்க தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் தீர்மானம்