×

5 லட்சம் கோடி டாலர் பொருளாதார இலக்கை எட்ட நிலம், கடல்வழி எல்லை பாதுகாப்பு அவசியம்: அமித்ஷா பேச்சு

புதுடெல்லி: ரூ.5 லட்சம் கோடி டாலர் பொருளாதார இலக்கை எட்ட நிலம் மற்றும் கடல்வழி எல்லையை பாதுகாப்பது மிக அவசியம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார். இந்திய உளவுத்துறை தொடர்பான 32வது கருத்தரங்கு நேற்று டெல்லியில் நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்று பேசினார். அவர் பேசியதாவது:  தேசிய பாதுகாப்பு தொடர்பான பல்வேறு சவால்களை மத்திய உளவுத்துறை கடந்த 5 ஆண்டுகளாக திறமையாக கையாண்டுள்ளது. குறிப்பாக வடகிழக்கு மாநிலங்களில் தீவிரவாத சக்திகளை ஒழித்துள்ளது. 5 லட்சம் கோடி (5 டிரில்லியன்) டாலர் பொருளாதாரத்தை எட்டுவதை நமது நாட்டின் இலக்காக உள்ளது. இதற்கு நிலம் மற்றும் கடல் எல்லை பாதுகாப்பை உறுதிப்படுத்துவது அவசியம். பாதுகாப்பு பிரச்னைக்கு தீர்வு காண்பவரை அடையாளம் கண்டு ஊக்கப்படுத்தவேண்டும்.

தேசிய பாதுகாப்புக்காக ஓய்வின்றி கடுமையாக உழைக்கும் மத்திய உளவுத்துறையினருக்கு எனது வணக்கத்தை செலுத்துகிறேன். அவர்களது பங்களிப்பு நாட்டின் பாதுகாப்புக்கு வலு சேர்க்கிறது. நாட்டில் நக்சலைட்கள் மற்றும் தீவிரவாதிகளை அடியோடு ஒழிக்க உளவுத்துறையின் நடவடிக்கை மிக உதவியாக உள்ளது. மனித கடத்தல் மற்றும் ஆயுதக் கடத்தலை தடுக்கவும், எல்லையில் ஊடுருவலை தடுக்கவும், கள்ளநோட்டு புழக்கத்தில் விடுவதை தடுக்கவும், ஹவாலா பணப்பரிமாற்றம் மற்றும் போதை மருந்து கடத்தலை தடுப்பதிலும் நீங்கள் ஆற்றிய சேவை மறக்க முடியாதது. பல்வேறு பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் உளவுத்துறை அமைப்புகளிடையே ஒத்துழைப்பு மிக அவசியம். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Land ,Amit Shah Land ,Amit Shah , 5 Lakh Crores, Dollar, Economic Goal, Reach Land, Maritime Security, Amit Shah, Talk
× RELATED தமிழ்நாட்டில் தயாராகிறது ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்..!!